ஐரோப்பிய ஒன்றிய கரிம எல்லை வரியால் சிங்கப்பூரில் மிகக் குறைந்த தாக்கம்

ஐரோப்பிய ஒன்றிய கரிம எல்லை வரியால் சிங்கப்பூரில் மிகக் குறைந்த தாக்கம்

2 mins read
e92a4544-e204-4728-8bfe-b32b9f45684d
சிங்கப்பூரில் உள்ள வேதிப்பொருள், இரும்பு, எஃகு தொடர்பான உற்பத்தியிலும் அதனைத் தொடர்ந்து அலுமினியம் தொடர்பான உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த வரியால் மிகவும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஐரோப்பிய சுற்றுச்சூழல் வரி விதிப்பு முறை, இதுவரை சிங்கப்பூரில் ‘மிகக் குறைந்த’ தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர், கரிம எல்லைச் சீரமைப்புச் செயல்நுட்பம் என அழைக்கப்படும் இந்த வரிக்கு உட்படும் பொருள்கள், 2025ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுக்கான சிங்கப்பூரின் உள்நாட்டு ஏற்றுமதிகளில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தன என்று கூறினார்.

இந்த பொறிமுறையானது சிமெண்ட், இரும்பு, எஃகு, அலுமினியம், உரங்கள், ஹைட்ரஜன், மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிகளுக்குப் பொருந்தும். இத்தகைய பொருள்களின் உற்பத்தி செயல்முறையானது, புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான அதிக அளவிலான உமிழ்வுகளை உருவாக்கக்கூடும்.

கிராண்ட் தோர்ன்டன் சிங்கப்பூர் என்ற கணக்கியல், ஆலோசனை நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை, நிலைத்தன்மை சேவைகளுக்கான இயக்குநர் ஹோங் டின் வெய், இங்குள்ள வேதிப்பொருள், இரும்பு, எஃகு தொடர்பான உற்பத்தியிலும், அதனைத் தொடர்ந்து அலுமினியம் தொடர்பான உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த வரியால் மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

இருப்பினும், இந்தத் திட்டத்தின் தாக்கம் சிங்கப்பூரில் தற்போது மிதமாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களையே சிங்கப்பூர் பெரிதும் சார்ந்திருப்பதால், மூலப்பொருள்களின் விலை உயர்வுக்கு அது ஆளாகக்கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாசு உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடுகளை ஈடுசெய்வதற்காக மற்ற இடங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் விலைகளை உயர்த்தினால் இது நிகழலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிம எல்லைச் சீரமைப்புச் செயல்நுட்பம், அக்டோபர் 2023 முதல் ஒரு இடைநிலைக் கட்டத்தில் இருந்த பிறகு, ஜனவரி 1ஆம் தேதி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கிடையில், பிரிட்டனின் கரிம எல்லைச் சீரமைப்புச் செயல்நுட்பத்தை 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்