சிங்கப்பூரில் மின்வாகனங்களின் விற்பனையில் ஏற்றம்

சிங்கப்பூரில் மின்வாகனங்களின் விற்பனையில் ஏற்றம்

2 mins read
199515bd-5f2c-42b1-b2e8-3b59a1ea2af3
பிஒய்டி டால்ஃபின்: இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஆக அதிக விற்பனையாயின பிஒய்டி கார்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கார் வாங்குவோர் படிப்படியாக மின் வாகனங்களை நாடுகின்றனர். சென்ற மாதம் பதிவான ஐந்து புதிய கார்களில் ஒன்று மின்சாரத்தால் இயங்கும் வகையைச் சேர்ந்தது.

ஜூலை மாதத்தில் 486 புதிய மின்வாகனங்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் விற்பனையான மின்வாகனங்களின் எண்ணிக்கை 15.2 விழுக்காடாக (2,378 கார்கள்) இருந்தது. முதல் ஆறு மாதங்களில் அது 14.3 விழுக்காடாக (1,892 கார்கள்) இருந்தது.

ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் பதிவான 13.4 விழுக்காட்டை (1,462 கார்கள்) காட்டிலும் இது அதிகம்.

ஜூலை கார் விற்பனை அதிகரிப்புக்கு பிஒய்டி, டெஸ்லா, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களே முக்கியக் காரணம்.

முதல் ஏழு மாதங்களுக்கு பிஒய்டி, டெஸ்லா, பிஎம்டபிள்யூ முறையே 474, 451, 400 கார்களைப் பதிவுசெய்து மிகச் சிறந்த மின்வாகன விற்பனை நிறுவனங்களாகத் திகழ்கின்றன.

அவற்றுக்கு அடுத்தபடியாக மெர்செடிஸ் பென்ஸ் 249 கார்களையும் ஹியுண்டாய் 200 கார்களையும் பதிவுசெய்தன.

நாடுகளை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலில், ஜெர்மானியக் கார்கள் முதல் இடத்தில் வந்தன. அதன் 861 கார்கள் அல்லது 36.2 விழுக்காட்டு கார்கள் விற்பனையாயின.

அதனைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த கார்கள் இரண்டாம் இடத்தில் இடம்பெற்றன. அந்நாட்டின் 577 கார்கள் அல்லது 23.4 விழுக்காட்டு கார்கள் விற்கப்பட்டன.

அமெரிக்கக் கார்கள் அதற்கு அடுத்த நிலையில் இடம்பெற்றன. அதன் 451 கார்கள் அல்லது 19 விழுக்காட்டு கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் இந்தப் போக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது. இறுதியில் சீனாவைச் சேர்ந்த கார்கள் முதல் இடத்தில் இடம்பெறலாம் என்று நம்பப்படுகிறது. காரணம், மின்வாகனச் சந்தை மேம்பாட்டில் அவை ஆக முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பான், முன்னணி கார் தயாரிப்பாளராக இருப்பதால் அதன் கார்கள் நிச்சயம் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்