செயற்கை நுண்ணறிவினால் வேலைகள் மாறினாலும் அரசாங்கம் சிங்கப்பூரர்களை மையப்படுத்துவதையே முன்னுரிமையாகக் கொள்ளும் எனத் தமது தேசிய தினப் பேரணி உரையில் கூறினார் பிரதமர் வோங்.
கடந்தகாலத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டபோது புதிய வாய்ப்புகள் எழுந்தன; மக்களால் உயர் திறன் தேவைப்படும், அதிகச் சம்பளம் வழங்கும் வேலைகளைத் தம்வசப்படுத்த முடிந்தது என அவர் சுட்டினார்.
“புதிய ஏஐ சார்ந்த யுகத்தில் நாம் நுழைகிறோம். ஏஐ விரைவாக வளர்ந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏஐயினால் அடிப்படைக் கணிதக் கணக்குகளுக்குக்கூட நம்பகமான தீர்வுகள் வழங்க இயலவில்லை. இன்றோ அனைத்துலகக் கணித ஒலிம்பியாட்டில் ஏஐ பங்கேற்று தங்கம் வென்றுள்ளது,” என்றார் பிரதமர்.
இனி ஏஐ மேன்மேலும் வளரத்தான் செய்யும்; நம் வாழ்க்கைமுறையையும் மாற்றும் என்றார் பிரதமர்.
ஏற்கெனவே அந்த மாற்றம் நடந்து வருகிறது என்றார் அவர். “முன்பு தகவல்களுக்கு இணையத்தை நாடிய பலரும் இன்று நேரடியாக ஏஐ செயலிகளை நாடுகின்றனர்,” என்றார் அவர்.
பொதுச் சேவையில் ஏஐ பயன்பாடு நம்பிக்கையளிக்கிறது
“அரசாங்க அமைப்புகளின் தொலைபேசி அழைப்பு நிலையங்களில் முன்பு ஒவ்வொரு அழைப்புக்குப் பின்பும் உரையாடல் சுருக்கத்தை அதிகாரிகள் தாமாக எழுத வேண்டியிருந்தது.
“இன்றோ, ‘ஏஐ’யால் அந்த அழைப்பை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஒலியிலிருந்து எழுத்து வடிவாக்க முடிகிறது; தாமாக ஆங்கிலத்தில் ஒரு சுருக்கத்தை உருவாக்க முடிகிறது. எனவே அதிகாரிகளால் பொதுமக்களை உதவுவதில் கவனம் செலுத்த முடிகிறது,” என்றார் பிரதமர்.
பொருளியலின் ஒவ்வோர் அங்கத்திலும் உற்பத்தித்திறனை வளர்க்க ‘ஏஐ’யைப் பயன்படுத்துவதையும் வலியுறுத்தினார் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
“ஏற்கெனவே பெரிய நிறுவனங்கள் ரோபோடிக்ஸ், தானியக்க இயந்திரங்களுடன் ‘ஏஐ’யை இணைத்து முன்னோக்கிச் செல்கின்றன. இதைத் துவாஸ் துறைமுகத்தில் காண முடிகிறது. சாங்கி விமான நிலையத்திலும், பயணப்பைகளைக் கையாள்வதையும் மற்ற வான் தொடர்பானச் செயல்பாடுகளையும் எப்படித் தானியக்கமயமாக்க முடியும் என ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் பிரதமர்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘ஜிஇ வெர்னோவா’வையும் அவர் உதாரணமாகச் சுட்டினார். “இந்நிறுவனம் தன் அனைத்துலக விசையாழி (turbine) பழுதுபார்ப்புச் சேவை நிலையத்தை இங்கு அமைத்துள்ளது. இந்நிலையம் ‘ஏஐ’ மூலம் விசையாழிப் பாகங்களில் குறைகளை நிமிடக்கணக்கில் கண்டறிகிறது. பின்பு மனித ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தி, இன்னும் ஆழமான ஆய்வுக்கு வழி வகுக்கிறது. இவ்வாறு தொழில்நுட்ப, மனிதத் திறன்களை நம்மால் இணைக்க முடிவதால்தான் அனைத்துலக நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுக்கின்றன,” என்றார் பிரதமர்.
ஆனால் ஏஐ பெரிய நிறுவனங்களுக்கானது மட்டுமன்று; ஒவ்வொரு நிறுவனமும் ‘ஏஐ’யால் பயன்பெறலாம் என்றார் பிரதமர். ‘Q&M டெண்டல்’ நிறுவனம் ஏஐ மூலம் பல்சார்ந்த ஊடுகதிர் ஆராய்வதை உதாரணமாகச் சுட்டினார்.
“ஒவ்வொரு நிறுவனமும், குறிப்பாக நம் சிறிய, நடுத்தர வர்த்தகங்கள், ‘ஏஐ’யைச் சிறப்பாகப் பயன்படுத்தி தம் போட்டித்தன்மையை வளர்க்க ஆற்றல்படுத்துவோம்,” என உறுதியளித்தார் பிரதமர் வோங்.