ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதிகள் கைமாறினாலும் வர்த்தக முறையில் மாற்றமில்லை

ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதிகள் கைமாறினாலும் வர்த்தக முறையில் மாற்றமில்லை

2 mins read
5b32031b-99e0-430b-838f-613eeb4c4b8b
பேரகன் கடைத் தொகுதி 3.9 பில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள சில முக்கிய கடைத்தொகுதிகள் அண்மைய ஆண்டுகளாக கைமாறினாலும் இந்தப் பகுதியின் வர்த்தக முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, கடந்த ஏப்ரல் மாதம் 3.9 பில்லியன் வெள்ளிக்கு ‘பேரகன்’ கடைத்தொகுதி கைமாறியது.

இந்தக் கடைத் தொகுதியை வாங்கிய ‘கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைந்த வணிக அறக்கட்டளை’ பெரிய அளவிலான மறுமேம்பாட்டுப் பணிகளில் இறங்குவதைவிட, அங்குள்ள வாடகைக்கு உள்ள கடைகளை வாடிக்கையாளர்கள் அனுபவங்களுக்கு ஏற்ப மாற்றிப் புதுப்பிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.

இதனால், அந்தக் கடைத்தொகுதி தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 2.2 கிலோமீட்டர் நீளமுள்ள ஆர்ச்சர்ட் சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள, பழைமையான ‘டெல்ஃபி ஆர்ச்சர்ட்’ , ‘தி சென்டர்பாயின்ட்’ ஆகியவற்றின் நிலையும் இதுதான்.

கடந்த 2024ஆம் ஆண்டு ‘சிட்டி டெவலப்மென்ட்ஸ்’ (சிடிஎல்) நிறுவனம், டெல்ஃபி ஆர்ச்சர்ட் வளாகத்தை 439 மில்லியன் வெள்ளிக்கு வாங்கி, அந்தச் சொத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தியது.

அரசாங்கித்தின் நகர்ப்புறப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ், அருகிலுள்ள ‘ஆர்ச்சர்ட் ஹோட்டல்’, ‘கிளேமோர் கனெக்ட்’ ஆகியவற்றுடன் அவ்வளாகம் இணைக்கப்பட்டு மறுமேம்பாடு செய்யப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

ஆனால், தற்போதைக்கு அந்த மூன்று சொத்துகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் குறுகிய காலத்தில் வருவாயை அதிகப்படுத்துவதிலேயே குழுமம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் சிடிஎல் பேச்சாளர் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதேபோல், ‘ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி’ நிறுவனம், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘தி சென்டர்பாயின்ட்’டின் பின்பகுதியைத் தன்வசப்படுத்தி, சொத்துகளை ஒரே உரிமையாளரின்கீழ் கொண்டு வந்தது. இருப்பினும், இப்போதைக்கு அங்கும் உடனடி மாற்றங்கள் எதுவும் செய்யப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், வட்டார அளவிலான போட்டி சூடுபிடித்து வருகிறது.

தென்கொரியாவின் சோல் நகரில் 13 காற்பந்துத் திடல்களுக்கு ஈடான பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய வணிக வளாகமான ‘தி ஹூண்டாய் சோல்’ போன்ற திட்டங்கள் முளைத்துள்ளன. அதன் மாபெரும் அமைப்பு மட்டுமல்லாமல் அதன் கட்டடக் கலை, பசுமை, திடீர்க் கடைகள் ஆகியவை இளைய தலைமுறையினரையும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. அவ்வளாகத்தின் 49 விழுக்காட்டு இடம் உட்புறப் பூங்கா, பொழுதுபோக்கு பகுதிகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்காக் நகரமும் ‘தி எம்ஸ்பியர்’ போன்ற பிரம்மாண்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஐந்தாவது மாடியில் இரவு நேரக் கேளிக்கைப் பகுதியும் மேற்கூரையில் கடற்கரையை நோக்கிய மன்றமும் 6,000 பேர்வரை அமரக்கூடிய பொழுதுபோக்கு அரங்கமும் அமைந்துள்ளன.

ஆனால் சிங்கப்பூரிலோ மறுமேம்பாட்டிற்கான பொருளியல் கணக்குகள் பல உரிமையாளர்களைத் தயங்க வைக்கின்றன.

தற்போது நன்றாகச் செயல்பட்டு வரும் ஒரு கடைத் தொகுதியை மறுமேம்பாட்டிற்காக மூடினால் பல ஆண்டுகால வாடகை வருவாய் இழப்பு, வணிகத்தில் ஏற்படும் இடையூறு, கட்டுமானச் செலவு, நிதிச் செலவு போன்ற சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்