சுற்றுப்புற சுகாதார அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகளினால் 2026ன் முதல் காலாண்டில் எலி வளைகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் பேரளவு குறைந்துள்ளது.
இருந்தாலும் எலிகளுக்கு எதிரான செயல்பாடுகள் சிறிதளவும் குறையாது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டில் ஏறத்தாழ 4,900 எலி வலைகள் தீவு முழுவதும் இருந்துள்ளன.
ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு மாதங்களாக வாரியம் மேற்கொண்ட கடும் எதிர்ப்பு, கண்காணிப்பு, அமலாக்கம் போன்ற தொடர் நடவடிக்கைகளின் பயனாக அந்த எண்ணிக்கை 2,900ஆகக் குறைந்துள்ளது.
பொது வீடமைப்புப் பேட்டைகளிலும், சாலை ஓரங்களில் உள்ள புல்வெளிகளிலும், தொழிற்பேட்டைகளிலும் அதிக அளவில் எலி வளைகள் இருந்துள்ளதாக வாரியம் தெரிவித்தது.
எலிகளுக்கான உணவுகளின் மூலத்தை அகற்றுவதால் அவற்றின் எண்ணிக்கையை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்று வாரியம் விளக்கியது.
குப்பையும் அதன் நிர்வாகமும்
வாரியத்துடன் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இணைந்து எலிகள் நடமாடக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த உரிமையாளர்கள்மீது ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை 260 முறை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த 160 சம்பவங்களில் 150 உரிமையாளர்கள் முறையாகக் குப்பைகளை நிர்வகிக்கத் தவறினர்.
அதே வேளை, சிறந்த முறையில் குப்பைகள் நிர்வகிப்போரின் ஒத்துழைப்பு, எலி வளைகள் குறைவதற்கான முக்கிய காரணமாக வாரியம் குறிப்பிட்டது.
உதாரணமாக, எலிகளின் நடமாட்டத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் பானக் குப்பைகளைத் தனிமைப்படுத்துதல், அவற்றை விரைவாகக் கட்டுப்படுத்தத் தெளிவான நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்திய பிறகு, அங் மோ கியோ நடுவத்தில் 2023ஆம் ஆண்டின் இறுதி முதல் தொடர்ச்சியான எலித் தொல்லை ஏற்படவில்லை.
தனது காலாண்டு அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்ட வாரியம், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தீவு முழுவதும் தரையில் குப்பைகளைக் கொட்டிய குற்றங்களுக்காக சுமார் 3,000 அபராதங்கள் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
மேலும், தூய்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 66 அதிரடி அமலாக்க நடவடிக்கைகளை அது நடத்தியது.
அங்கு, சுற்றுக்காவல் பணியாளர்கள், நின்றுகொண்டு கண்காணிப்பவர்கள், கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்தியதுடன், குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காக கள அளவிலான செயல்பாடுகளையும் மேற்கொண்டது.

