பாதுகாப்பு வலுவாக இருந்தாலும் மக்களிடம் அலட்சியம் வேண்டாம்: சட்ட அமைச்சர்

பாதுகாப்பு வலுவாக இருந்தாலும் மக்களிடம் அலட்சியம் வேண்டாம்: சட்ட அமைச்சர்

2 mins read
7476bfc7-4210-4102-a18b-1d2e88cb9456
கலந்துரையாடலில் பங்கேற்ற சமயத் தலைவர்களுடன் உரையாடும் சட்ட அமைச்சர் எட்வின் டோங் (இடமிருந்து 3வது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐக்கிய நாட்டு அமைப்பின் உலக சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) ஷா தியேட்டர் லிடோ வளாகத்தில் கலந்துரையாடல் அங்கம் இடம்பெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூரில் பேரளவில் வெறுப்புணர்வுக் குற்றங்கள் புரியப்படவில்லை என்றாலும், மேலாதிக்க சித்தாந்தங்களை ஆசியர்களுக்குப் பிடிக்கும் வகையில் எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று எச்சரித்தார்.

பிளவை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை எப்படிக் கையாள்வது என்பதை ஒரு சமூகமாக கற்றுக்கொள்ளவில்லை என்றால், மிகவும் உறுதியான சமூகங்களைக் கூட அவை சிதைத்துவிடும் என்றார் அவர்.

அதற்கான வழிகள் குறித்துப் பேசிய அவர், பிளவை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களைப் பற்றிப் பேச எப்போதும் ஒரு தளம் இருக்க வேண்டும் என்றும் அவற்றைப் பகைமையுடன் அணுகாமல் பரிவுடனும் புரிதலுடனும் விவாதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

இன, சமய நல்லிணக்கம் மீது சிங்கப்பூரர்கள் ஆழமான கடப்பாடு வைத்திருக்க வேண்டும் என்றும் திரு டோங் அறிவுறுத்தினார்.

“சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைப்புகளின் வலுவான திறனும் அவற்றின்மீது பொதுமக்கள் வைத்துள்ள மிகுந்த நம்பிக்கையும் எந்தவொரு தாக்குதலையும் உள்துறைக்குழு எதிர்கொண்டு அதை இயல்பாகவே தடுத்துவிடும் என்று பல சிங்கப்பூரர்களை எண்ண வைத்துள்ளன. இந்த அலட்சியம் இருக்கக் கூடாது,” என்று கேட்டுக்கொண்டார் திரு டோங்.

சிங்கப்பூரர்கள் தகவலறிந்து நடுநிலையோடு இருந்து, ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொண்டு ஒற்றுமையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

எஸ்ஜி பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் புதிய ‘ஆன் மிடில் கிரவுண்ட்ஸ்’ எனும் சமூக மனவுறுதி முன்னோடித் திட்டத்தையும் அமைச்சர் டோங் அறிமுகப்படுத்தினார்.

இந்த முன்னோடித் திட்டம் சிங்கப்பூர் பண்புகள், கலாசார நல்லிணக்கம், சமூக நற்பண்புகள், பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு அடித்தள முயற்சியாகும்.

பெற்றோர், குடும்பங்கள், சமய அமைப்புகள், சமூகத் தலைவர்கள், இளையர் செயற்பாட்டாளர்கள், உயர்கல்விக் கழக மாணவர்கள் ஆகியோரை இதில் ஈடுபடுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூர் சமூகத்தில் பொதுப் பாதுகாப்பு, சமூக மனவுறுதியை மேம்படுத்தும் அதேவேளையில், ஒற்றுமையான, ஆக்கபூர்வமான, இணக்கமான சகவாழ்வை வளர்ப்பதில் மேற்கண்டவர்களின் பங்கும் பொறுப்புகளும் என்ன என்பதை ஆராய்வதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்