எரிபொருள் விலைகள் ஏறினாலும் ரயில் கட்டண உயர்வு கோரப்படவில்லை

எரிபொருள் விலைகள் ஏறினாலும் ரயில் கட்டண உயர்வு கோரப்படவில்லை

2 mins read
a5b71e36-f5ce-4ecb-b87f-a602f16b64cb
ஆக அண்மைய பயணக் கட்டண உயர்வு 2025 டிசம்பர் 27ஆம் தேதி நடப்புக்கு வந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இருபெரும் ரயில் போக்குவரத்து நிறுவனங்களான எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் எஸ்எம்ஆர்டியும் ஈரான் போர் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையைக் காரணம் காட்டி பயணக் கட்டணங்களை உயர்த்துமாறு கோரவில்லை.

பொதுப் போக்குவரத்து மன்றம் இதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.

பயணக் கட்டணங்கள் ஒவ்வோர் ஆண்டும் மறுஆய்வு செய்யப்படுகின்றன. மறுஆய்வின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அம்சங்களில் எரிசக்தி விலைகளும் அடங்கும் என்று, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கையில் மன்றம் கூறியது.

2026ஆம் ஆண்டுக்கான கட்டண மறுஆய்வின்போது, ​​பயணிகளின் கட்டுப்படியாகும் தன்மை குறித்த அக்கறைகளுக்கும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அதிக செலவுகளுக்கும் இடையில் ஒரு சமநிலை ஏற்படுத்தப்படுவதை, தான் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மன்றம் தெளிவுபடுத்தியது.

அடிப்படைப் பணவீக்கம் மற்றும் சம்பளங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் போக்குவரத்துக் கட்டண மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றது அது.

வருடாந்தர போக்குவரத்துக் கட்டண மறுஆய்வு ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்பட்டு டிசம்பரில் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

இதற்கு முன்னர் 2025 டிசம்பர் 27ஆம் தேதி பொதுப் போக்குவரத்துப் பயணங்களுக்கான புதிய கட்டணங்கள் நடப்புக்கு வந்தன. ஒட்டுமொத்தமாக ஐந்து விழுக்காடு கட்டண உயர்வு அப்போது அமல்படுத்தப்பட்டது.

பெரியோர்களுக்கான கட்டணம் ஒவ்வொரு பயணத்துக்கும் ஒன்பது காசு முதல் பத்து காசு வரையில் உயர்த்தப்பட்டது. வங்கி அட்டைகள், சிம்ப்ளிகோ அட்டைகள் அல்லது ஈஸி-லிங்க் அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு அந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.

தொடர்புடைய செய்திகள்

பேருந்துக் கட்டணங்கள் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், ரயில் கட்டணங்கள் அப்படி இல்லை. ரயில் போக்குவரத்தை நடத்தும் நிறுவனங்களுக்கே அவை போய்ச்சேரும்.

பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கிய பின்னர் உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வு கண்டன.

மோதல் அதிகரித்ததாலும் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டுவரப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் எரிபொருள் விலைகள் மிதமிஞ்சிய அளவில் ஏற்றம் கண்டன.

பல்வேறு போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதால் சிங்கப்பூரில் உள்ள பயனீட்டாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டு உக்ரேன் போர் காரணமாக உயர்ந்த அளவையும் கடந்து எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி, கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் மற்றும் சினோபெக் எரிபொருள் நிலையங்களில் ஒரு லிட்டர் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலை $3.42ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்