தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் ஏற்பட்ட விபத்தின் தீவிரத்தைப் பகிர்ந்த தம்பதி

விபத்துகளின் எண்ணிக்கைகள் குறைந்தாலும் காயங்களின் தீவிரம் அதிகம்

2 mins read
5f7523fc-46b6-481a-ba83-b1690d20e22d
மின்சைக்கிள் விபத்துகள் குறைந்திருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் கடுமை என்கிறது நிலப் போக்குவரத்து ஆணையம். - படம்: த பிஸ்னஸ் டைம்ஸ்

அமெரிக்காவில் மூத்த மகனுடன் தமது பொன் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த 71 வயது திருவாட்டி மலர் சிங்கத்தை அண்மையில் நடந்த விபத்து நிலைகுலையச் செய்துள்ளது.

மின்சைக்கிளோட்டி மோதி அண்மையில் தாடை அறுவைச் சிகிச்சை செல்லவேண்டிய நிலைக்கு ஆளானார் 71 வயது திருவாட்டி மலர் சிங்கம்.
மின்சைக்கிளோட்டி மோதி அண்மையில் தாடை அறுவைச் சிகிச்சை செல்லவேண்டிய நிலைக்கு ஆளானார் 71 வயது திருவாட்டி மலர் சிங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிசம்பர் 10ஆம் தேதி, திருவாட்டி மலரும் அவரது 74 வயது கணவர் ஃபிராங்க் சிங்கமும் பாசிர் ரிஸ் கடைத்தொகுதிக்கு வெளியே பலதுறை மருந்தகத்திற்கு அருகே உள்ள பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராவிதமாக மின்சைக்கிளோட்டி ஒருவர் திருவாட்டி மலரின் பின்பக்கத்தில் மோதினார். அதன் விளைவாக கீழே விழுந்த அவரது தாடை உடைந்து ரத்தம் கசிந்தது.

திருவாட்டி மலருக்கு ஓர் அடி பின்னே நடந்துவந்த திரு ஃபிராங்க், மின்சைக்கிளோட்டி ஒருவர் வேகமாக வருவது குறித்து மனைவியிடம் எச்சரித்த ஒருசில வினாடிகளில் விபத்து நேர்ந்தது.

மின்சைக்கிளோட்டி ஓட்டியவர் 50 வயது மதிக்கத்தக்க கிராப் உணவு விநியோகிப்பாளர் என்று திரு சிங்கம் கூறினார்.

உணவை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த பிறகு தேவையான உதவிகள் செய்வதாகக் கூறிவிட்டு அந்த ஓட்டுநர் சென்றதாகவும் சில நிமிடங்கள் கழித்து திரும்பிவந்து உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட திருவாட்டி மலருக்குத் தாடையைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனைக்கு மனைவியோடு வந்த கிராப் ஓட்டுநர் தவற்றுக்கு வருந்துவதாகக் கூறினார். அவரை தம்பதியும் மன்னித்தனர்.

மேலும், தனிநபர் நடமாட்ட சாதனங்களைப் பயன்படுத்துபவர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் சிங்கம் தம்பதி பகிர்ந்துகொண்டனர்.

விபத்தை ஏற்படுத்திய மின்சைக்கிளோட்டியை மன்னித்தனர் சிங்கம் தம்பதி.
விபத்தை ஏற்படுத்திய மின்சைக்கிளோட்டியை மன்னித்தனர் சிங்கம் தம்பதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, 2019ஆம் ஆண்டு முதல் பாதைகளில் நடக்கும் விபத்துகள் பொதுவாகக் குறைந்து வருகின்றன.

2019ஆம் ஆண்டும் 303ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 104ஆகக் குறைந்தன.

பாதைகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்திருந்தாலும், விபத்தினால் ஏற்படும் காயத்தின் தீவிரம் கடுமையாக இருக்கலாம். சிலநேரம் உயிரிழப்பைகூட ஏற்படுத்தலாம்.

மத்திய வட்டார (சிங்கப்பூர்) அவரச சிகிச்சைப் பிரிவுக்கான வட்டார இயக்குநர் துணைப் பேராசிரியர் தியோ லி-செர்ங், தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் விலா எலும்பு முறிவுகளும் தலை பகுதியில் காயமும் ஏற்படுவதாகக் கூறினார்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி சாராசரியாக ஆண்டுக்கு 15 முதல் 16 பேர் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்புடைய விபத்தில் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்