தெம்பனிசில் எந்த நிகழ்ச்சி இடம்பெற்றாலும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்வார் முகம்மது நிசாம் முகம்மது நாசிர், 48.
‘காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தில் இணைந்துள்ள இவரது குடும்பத்தினர், குடும்பப் பிணைப்பை அதிகரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
திரு நிசாமின் குடும்பம் உட்பட மொத்தம் 89 வசதி குறைந்த குடும்பங்கள், நமது தெம்பனிஸ் நடுவத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
‘நமது தெம்பனிஸ் நடுவம் திருப்பிக் கொடுத்தல்’ எனப்படும் அந்த நிகழ்ச்சி தெம்பனிஸ் சமூகச் சேவை அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, வசதி குறைந்த குடும்பங்களை அரவணைக்கும் நோக்கம் கொண்டது.
நமது தெம்பனிஸ் நடுவத்தின் தொண்டூழியத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு வணிகப் பங்காளிகள், ஆதரவாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து $85,000க்கும் அதிகமான கூட்டுப் பங்களிப்பு கிடைத்துள்ளது.
நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“இத்தகைய முயற்சிகள், நிறுவனம் சிறிதோ பெரிதோ அது ஓர் உன்னத நோக்கத்திற்காகச் செயலாற்ற முன்வர வேண்டியது முக்கியம் என்பதைக் குறிக்கிறது,” என்று சொன்னார் திரு மசகோஸ்.
தொடர்புடைய செய்திகள்
இதில் ’கிவ்.ஏஷியா’ அமைப்பின் ஓராண்டு கால உறுதிமொழியாக $63,200 மதிப்புள்ள நமது தெம்பனிஸ் நடுவத்தின் உணவக மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளும் நடுவத்தின் குத்தகைதாரரான நெய்ல் அர்க்காடியா வழங்கும் $2,000 மதிப்புள்ள ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளும் அடங்கியுள்ளன.
இதன் மூலம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் குடும்பங்களுக்குத் தேவையான நேரடி உதவிகள் நீட்டிக்கப்படுகின்றன.
சனிக்கிழமை காலையில் தொடங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
கிராப் வாடகை வாகன ஓட்டுநரான திரு நிசாம், இது போன்ற நிகழ்ச்சிகளைப் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார்.
முதல் முறையாகத் தனது பிள்ளைகள் நால்வருடனும் இதில் பங்கேற்ற அவர், தன்னைப் போன்ற குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

