தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வொரு பொதுத் தேர்தலும் நேர்மை, கடப்பாடு கொண்டோரைத் தேர்ந்தெடுப்பதற்கானது: அமைச்சர் சான்

2 mins read
4a1d722f-c23a-4a11-956b-2ee3bd401ae8
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (இடம்) உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வொரு பொதுத் தேர்தலும், ஆளும் மக்கள் செயல் கட்சியும் (மசெக) எதிர்க்கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன என்பதற்கும் அப்பால், நேர்மையும் கடப்பாடும் கொண்டோரைத் தேர்ந்தெடுப்பதற்கானது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

அவர்கள் தொகுதியளவில் குடியிருப்பாளர்களைப் பேணுவதற்கும் தேசிய அளவில் நல்ல அரசாங்கத்தை அமைப்பதற்கும் அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதற்கும் இது அவசியம் என்றார் அவர்.

கட்சியின் உதவித் தலைமைச் செயலாளரான திரு சான், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மசெக வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

புளோக் 226 சிராங்கூன் அவென்யூ 4ல் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பாட்டாளிக் கட்சியின் வசமுள்ள அந்தத் தொகுதியில் அனுபவசாலிகளும் புதியவர்களும் கலந்த வேட்பாளர் குழுவைக் களமிறக்கக் கட்சி திட்டமிடுவதாக அமைச்சர் சான் கூறினார்.

உலக ஒழுங்குமுறை மாறுவதுடன் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் சிங்கப்பூரர்களின் தீர்ப்பை எதிர்நோக்குவதைச் சுட்டிய அவர், “அனைத்துலகப் பங்காளித்துவ நாடுகளின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறக்கூடிய குழுவை உருவாக்குவது எங்கள் இலக்கு. கொந்தளிப்பான காலகட்டங்களில் சிங்கப்பூர் மீதும் சிங்கப்பூரர்கள் மீதும் தொடர்ந்து நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய அது உதவும்,” என்று கூறினார்.

அரசாங்கம் தொடர்ந்து நல்ல வேலைகளையும் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கவும் அது வழிவகுக்கும் என்று திரு சான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்கள் பலரும் மசெக அரசாங்கத்தை விரும்பினாலும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாக அவர் சொன்னார்.

ஒவ்வொரு தேர்தல் களத்தையும் கட்சி தீவிரமாகக் கருதுவதாகவும் எந்தவொரு முடிவு குறித்தும் அது மெத்தனமாக இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

“மசெக வசமுள்ள எந்தத் தொகுதியிலும் வெற்றி நிச்சயம் என்று கருதிவிட முடியாது. அதேபோல, எதிர்க்கட்சி வசமுள்ள எந்தத் தொகுதியும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு இடம்பெறுவதற்கான முழுப் பொறுப்பும் தங்களையே சேர்ந்தது என்று எண்ணக்கூடாது,” என்றார் திரு சான்.

மக்கள் செயல் கட்சி, அல்ஜுனிட் குழுத் தொகுதி வேட்பாளர் அணியில் புதுமுகங்களாக நால்வரை அறிவித்துள்ளது. டாக்டர் ஃபைசல் அப்துல் அஸீஸ், திரு டேனியல் லியூ, டாக்டர் ஏட்ரியன் ஆங், திரு ஜெகதீஸ்வரன் ராஜு ஆகியோர் அந்த நால்வர். சென்ற தேர்தலில் போட்டியிட்ட திருவாட்டி சான் ஹுவெய் யூ ஐவர் கொண்ட அந்த அணிக்குத் தலைமைதாங்குவார்.

குறிப்புச் சொற்கள்