தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பங்கேற்க சிங்கப்பூரர்களுக்கு பிரதமர் வோங் அழைப்பு

3 mins read
c5844902-7a8b-4743-a915-dc67918755fb
வெளியுறவுக் கொள்கைகளில் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த விரும்புவதாக பிரதமராக தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் திரு லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

புவிசார் அரசியல் பதற்றங்களும் ஆயுதச் சண்டைகளும் அதிகரித்து, நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை எதிர்கொள்ளும் உலகத்தில், வெளியுறவுக் கொள்கை சார்ந்த பிரச்சினைகளில் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த விரும்புவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

“இந்த பிரச்சினைகளில் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்துவது எனக்கு முக்கியமானது. ஏனென்றால், முக்கிய அம்சங்கள் குறித்து அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, சிங்கப்பூரின் கூட்டுப் பாதுகாப்பு, அடிப்படை நலன்கள் தொடர்புடைய முக்கியமான பிரச்சினைகளில்,” என்று அவர் கூறினார்.

மே மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) திரு வோங் பேசினார்.

சிங்கப்பூர் அதன் வெளிப்புறச் சூழலைப் புறக்கணித்துவிட முடியாது என்றார் அவர்.

“நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வடிவமைக்கும் வலிமைவாய்ந்த சக்திகள்,” உள்ளன. அவை சிங்கப்பூரில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆபத்தான, சிக்கலான இந்த உலகில், மற்ற நாடுகளுடனான சிங்கப்பூரின் உறவுகள் மிக முக்கியமானவை. பழைய, புதிய நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதும் எனது முக்கிய முன்னுரிமையாகும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

மலேசியா, புருணை பயணங்களுடன் உறவைக் கட்டியெழுப்பும் பணியை சிங்கப்பூரின் நான்காவது தலைமுறைத் தலைவராகப் பதவியேற்ற சில நாள்களிலேயே பிரதமர் வோங் ஏற்கெனவே ஆர்வத்துடன் தொடங்கிவிட்டார். அண்மைய மாதங்களில் லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும் அவர் சிங்கப்பூரில் வரவேற்றுள்ளார்.

மேலும் பல ஆசியான் நாடுகள், தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே முக்கிய பங்காளித்துவ நாடுகளுக்கான பயணங்களும் இடம்பெறும் என்று பிரதமர் வோங் கூறினார்.

வரும் மாதங்களில் லாவோஸில் ஆசியான் உச்சநிலைக் கூட்டம், பெருவில் ஏபெக் உச்சநிலைக் கூட்டம், சிங்கப்பூரில் ஜி20 உச்சநிலைக் கூட்டம் உள்ளிட்ட பல அனைத்துலக உச்சநிலைக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வார்.

“இவை அனைத்தும் எனது சகாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள். எனது புதிய பொறுப்பில், அவர்களைச் சந்தித்து, தலைமைத்துவ நிலையில் நல்ல தனிப்பட்ட உறவுகளை நிறுவுவது முக்கியம். ஏனெனில், அவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உறவுக்கான தொனியைப் பிரதிபலிக்கின்றன,” என்றார் அவர்.

“சில நாடுகளில், அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன அல்லது மாற்றங்கள் ஏற்படும். அதாவது புதிய அரசாங்கங்கள், புதிய மக்கள், புதிய தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும். பழைய நண்பர்களுடன் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டாலும் கூட,” என்றார் பிரதமர் வோங்.

பெரும்பாலும் புதிய அரசாங்கம் பதவி ஏற்றபின்னர் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

“எனவே, எப்போதும் விழிப்புடன் இருந்து, சிங்கப்பூரின் பங்காளித்துவ உறவுகளை வலுப்படுத்தவும் புதிய இணைப்புகளை உருவாக்கவும் உலக அரங்கில் சிங்கப்பூரின் தேவையை நிலைநிறுத்தவும் இந்தப் புதிய சூழலில் தொடர்ந்து வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“வேறுபாடுகள், கண்ணோட்டங்கள் இருந்தபோதிலும் ஒரே மக்களாக ஒன்றுபட்டு, தேசிய நலன்களை முன்னெடுக்க ஒரு பொதுவான நிலையை எடுக்க வேண்டும்,” என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்