நீரிணையில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் கப்பலில் அனைவரும் நலம்

ஈரானிய புரட்சிக் காவல் படைமீது சந்தேகம்: அமெரிக்கா

நீரிணையில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் கப்பலில் அனைவரும் நலம்

2 mins read
அனைத்துலகச் சட்டத்தை மீறிய தாக்குதல்: கடல்துறை, துறைமுக ஆணையம்
be27eb52-4293-4396-a862-fe0d29fd16b0
‘எவர் லவ்லி’ என்ற பெயருடைய சிங்கப்பூரில் பதிவான வர்த்தகக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைவிட்டு வெளியேறிவிட்டது. - படம்: வெசல்ஃபைன்டர்

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ‘எவர் லவ்லி’ என்ற வர்த்தகக் கப்பல், வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு 10 மணியளவில் ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்டது.

அந்தக் கப்பல் நீரிணையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் அதில் இருந்த 21 சிப்பந்திகளும் எவ்விதக் காயங்களும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத ஆயுதத்தால் தாக்கப்பட்ட அக்கப்பலுக்குப் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அதன் மாலுமி அறையின் கூரையும் சன்னலும் சிறிதளவு பாதிப்படைந்ததாகத் தெரிகிறது.

நீரிணையைவிட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்ட கப்பல், திட்டமிட்டபடி அதன் பயணத்தைத் தொடர்கிறது என்று ஆணையம் தெரிவித்தது.

ஓமனின் காஹர் நைவா பகுதிக்கு அருகில் அச்சம்பவம் நிகழ்ந்தது. நீரிணையில் தன் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கடல் பகுதியை மட்டும் கப்பல்கள் பயன்படுத்த அனுமதி உள்ளது என்று ஈரான் அறிவித்த சில மணி நேரங்களில் அந்தத் தாக்குதல் எவர் லவ்லி கப்பல்மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தைவானிய நிறுவனமான எவர்கிரீன் மரீன் நிறுவனத்தின் துணை நிறுவனம் சிங்கப்பூரில் இயங்கும் எவர்கிரீன் மரீன் (ஏஷியா) ஆகும்.

அந்நிறுவனத்தின் இணையத்தளத் தரவுகளின்படி, 101,063 டன் எடைகொண்ட அக்கப்பல் 2015ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

தாக்குதலால் பெரிய சேதங்கள் அடையாத கப்பலின் பயணத்துக்கான இயந்திரமும் சாதனங்களும் முறையாகச் செயல்படுவதாகவும் சிப்பந்திகளுடன் அது ஏற்றிவந்த சரக்குகளும் பாதுகாப்பாகவே உள்ளன எனவும் அந்நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் உறுதிப்படுத்தியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஈரானின் புரட்சிக் காவல் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அமெரிக்காவின் இரு மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

ஆணையம் ஆதங்கம்

பயணத்தைத் தொடரும் கப்பலுடன் தொடர்பில் உள்ளதாகவும் எவ்வித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

அனைத்துலகச் சட்டத்தை மீறிய நியாயமற்ற தாக்குதல் இது என்று சம்பவம் குறித்து அதன் அறிக்கையில் ஆணையம் கவலையை வெளிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்