ஆர்ச்சர்ட் ரோட்டில் ‘டேஸ்ட் ஆர்ச்சர்ட்’ என்ற பெயரில் செயல்படும் கட்டடத்தில் வாடகைக்கு இருந்த பல கடைகளுக்கு, அவற்றின் குத்தகைகள் காலாவதி ஆகும் முன்னரே வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னாளில் ‘ஒஜி ஆர்ச்சர்ட் பாயின்ட்’ என்ற பெயரில் செயல்பட்ட கட்டடம் கடந்த 2024ஆம் ஆண்டில் ‘டேஸ்ட் ஆர்ச்சர்ட்’ என்று பெயர்மாற்றம் கண்டது. அந்தக் கட்டடத்தை ஒஜி நிறுவனத்திடம் இருந்து ‘ஹவ் மார்ட் சூப்பர்மார்கெட்’ என்ற பேரங்காடி நிறுவனம் பிரதான வாடகைக் குத்தகையைப் பெற்றது.
அதனிடம் இருந்து பல சிறு வர்த்தகங்கள் உப வாடகைதாரர்களாக இயங்கிவருகின்றன.
ஆனால் கட்டட உரிமையாளர்களான ஒஜி நிறுவனம், ஹவ் மார்ட் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் ஹவ் மார்ட் வாடகை பாக்கிவைத்துள்ளதோடு, அனுமதி பெறாமல் உப வாடகை வழங்கியதாக ஒஜி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இரு நிறுவனங்களுக்குமான பிரதான குத்தகை ஒப்பந்தம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று அங்குள்ள சுமார் 30 சிறு வர்த்தகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. பிறகு அந்தக் கடைகள் அடுத்த 2026ஆம் ஆண்டு மார்ச் 31தேதி வரை தொடர்ந்து இருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாடகைக் குத்தகை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளதால் நஷ்ட ஈடுக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை உள்ளது. அதனால் அங்குள்ள சிறு வர்த்தகங்களின் உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.
சிறு வர்த்தகங்களில் சிகை அலங்காரம், துணைப்பாட வகுப்பு நிலையம் போன்றவை உள்ளன. வியாபார இழப்பு, கடைகளின் சீரமைப்பு போன்றவற்றுக்கு அவை நஷ்ட ஈடை எதிர்பார்க்கின்றன.
ஆனால் ஹவ் மார்டின் வழக்கறிஞர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு என்றாலும் நஷ்ட ஈடு பெறுவதற்கான உத்தரவாதத்தை தவிர்க்கின்றனர்.

