மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்த விபத்து வழக்கில், முன்னாள் நடிகர் எட்மண்ட் சென்னுக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்து நாள் சிறைத்தண்டனை, ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி நடந்த சாலை விபத்தில், எட்மண்ட் சென், 64, ஓட்டிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 21 வயது ஓட்டுநர் காயமடைந்தார். அவருக்கு மணிக்கட்டில் எலும்புமுறிவுகள் ஏற்பட்டன.
சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்குக் கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டை எட்மண்ட் சென் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஐந்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதியின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது தண்டனை அதிகமானது என்று வாதிட்ட வழக்கறிஞர், அதிகபட்சமாக $5,000 அபராதம் விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி திரு ஹரி குமார் நாயர், மாவட்ட நீதிபதியின் மதிப்பீடு தவறு என்று தம்மால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், ஐந்து நாள் சிறைத்தண்டனை அதிகமானது என்று கூறினார்.
ஐந்து நாள் சிறைத்தண்டனையை ஒரு நாளாகக் குறைத்து அவர் உத்தரவிட்டார்.

