கடந்த 2019ஆம் ஆண்டு நடையர் ஒருவர்மீது எஸ்பிஎஸ் பேருந்து மோதியதை அடுத்து, அப்பெண் தனது கால்களில் ஒன்றை இழக்க நேரிட்டது.
அப்பேருந்தை ஓட்டிய 62 வயதான டான் புவே கூ மீது, கவனக்குறைவாகப் பேருந்தை ஓட்டி, அப்பெண்ணுக்குக் காயம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இப்போது அவர் அப்பணியில் இல்லை.
இதன் தொடர்பில், அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் ஆர். அர்விந்திரன், டானுக்கு ஒன்பது மாதங்கள் முதல் ஓராண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். விபத்து நேர்ந்தபோது அப்பெண்ணின் வயது 30களில் இருந்தது என்றும் விபத்தைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
விபத்து நிகழ்ந்தபோது குற்றவாளி கனரக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்ததாகவும் நடையருக்குச் சாதகமாகப் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்ததாகவும் திரு அர்விந்திரன் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமது கட்சிக்காரருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்குமாறு தற்காப்பு வழக்கறிஞர் அந்தோணி வீ, நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
சம்பவத்திற்கு முன்னர் வாகனம் ஓட்டுவதன் தொடர்பில் டான் எந்தவொரு குற்றங்களையும் புரியவில்லை என்றும் பொதுப் போக்குவரத்தில் உன்னதச் சேவை ஆற்றியிருந்தார் என்றும் அவர் சொன்னார்.
டானுக்கான தண்டனை விவரம் அக்டோபர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

