தொலைத்தொடர்புக் கருவிகள் விநியோக, விற்பனை நிறுவனமான எம்டிஆர் (mDR) குழுமத்தின் முன்னாள் தலைமைச் செயலாக்க அதிகாரி ரிச்சர்ட் சியுவா மீதும் அதன் துணை நிறுவனத்தின் விற்பனை இயக்குநராகப் பணியாற்றிய பீட்டர் இங் மீதும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 31) நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சியுவா 4,057 கைப்பேசிகளையும் துணைக்கருவிகளையும் கடந்த 2020 நவம்பர் மாதத்துக்கும் 2021 டிசம்பருக்கும் இடையே கையாடிவிட்டார் என்றும் அவற்றின் மொத்த மதிப்பு $2.5 மில்லியனுக்கும் அதிகம் என்றும் காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.
சியுவா ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
எம்டிஆர் நிறுவனமும் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, கடந்த 2023 டிசம்பர் 23ஆம் தேதியன்று சியுவா பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, நெக்ஸ்ட் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் டான் இயோ கியான்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவர் கடந்த 2021ஆம் ஆண்டில் சியுவாவிடமிருந்து 3,974 கைப்பேசிகளையும் துணைக்கருவிகளையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு $2.4 மில்லியனுக்கும் அதிகம்.
பீட்டர் இங்கைப் பொறுத்தமட்டில், அவர் 2019 ஜனவரிக்கும் 2021 டிசம்பருக்கும் இடையே 155 கைப்பேசிகளையும் துணைக்கருவிகளையும் கையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு $200,560 எனத் தெரிவிக்கப்பட்டது.