உணவு நிறுவனமான ‘சக்குரா புஃபே’யின் உரிமையாளரின் மனைவிமீது 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
35 நிறுவனங்களுக்கு இயக்குநரான சிம் லிங் ஸென், 103 ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத் தவறிய சந்தேகத்தின்பேரில் அந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு, பானத் துறையில் உள்ளவை.
பத்து நிறுவனங்களுக்கு ‘சக்குரா புஃபே’ உணவு விநியோகித்தது.
சிம், அந்த ஊழியர்களுக்கு $432,870.63 பெறுமானமுள்ள சம்பளத்தை வழங்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
சிம், சென்ற ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதிவரை ‘சக்குரா புஃபே’யின் இயக்குநராகப் பதிவுசெய்யப்பட்டிருந்தார். அந்த நிறுவனத்தின் மற்றோர் இயக்குநர் அவரது கணவர்.
31 வயதான சிம், முதன் முதலில் 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் வரும் ஜூன் 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, உணவுப் பாதுகாப்புக் காரணங்களால் கடந்த மே மாதம், ‘சக்குரா புஃபே’யின் உரிமத்தை ரத்து செய்தது.
தொடர்புடைய செய்திகள்
சம்பளம் பெறாத ஊழியர்கள் மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்ட குற்றப் பத்திரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.
மே 24ஆம் தேதி நிலவரப்படி, சம்பளக் கோரிக்கைகளின் தொடர்பில் 112 முன்னாள் ஊழியர்களுக்கு உதவியிருப்பதாக மனிதவள அமைச்சும், சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் தெரிவித்தன.
அதோடு, குறுகிய கால நிவாரண நிதி, வெளிநாட்டு ஊழியர்கள் உதவி நிதி ஆகியவற்றின் மூலம், சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி, தகுதிபெற்ற 46 ஊழியர்களுக்கு நிதியுதவி பெற உதவியது.

