பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் தொடர்பில் பொருத்தமற்ற பதிவை வெளியிட்ட சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் தம்மை மாற்றிக்கொள்வதாகக் கூறியிருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
‘சியா வோங் சேம்பர்ஸ்’ என்னும் சட்ட நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான சியா பூன் டெக், கடந்த மார்ச் 22ஆம் தேதி தமது லிங்க்டுஇன் பக்கத்தில் பாலியல் வதை செய்யப்பட்டவர் பற்றி கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
‘அது மிகவும் பொருத்தமற்றது’ என்று அதே நாளில் திரு சண்முகம் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து திரு சியா தம்மைச் சந்திக்க விரும்பியதாக திரு சண்முகம் கூறினார். அந்தச் சந்திப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நிகழ்ந்தது.
தமது கருத்து பற்றிச் சிந்திப்பதாகவும் தம்மை மாற்றிக்கொள்வதாகவும் அமைச்சர் சண்முகத்தைச் சந்தித்துக் கூறியதாகத் திரு சியா தெரிவித்துள்ளார்.
திரு சண்முகம் கூறுகையில், “இன்று (ஏப்ரல் 10) நாங்கள் சந்தித்தபோது திரு சியா தமது கருத்துகள் குறித்தும் அணுகுமுறை குறித்தும் சிந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதுபற்றி ஆழமாகச் சிந்தித்து, தாம் வெளியிட்ட கருத்துகள் மிகவும் தவறானவை என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அவரிடம் யோசனை கூறினேன். தம்மை மாற்றிக்கொண்டு சமூகத்திற்குப் பங்களிப்பதற்கான வழிகளை ஆராயவிருப்பதாகத் திரு சியா தெரிவித்துள்ளார்,” என்றார்.

