முன்னாள் காவல்துறை அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

2 mins read
476dc812-f03d-4af6-9e16-f94c39873565
ஊழல் தடுப்புச் சட்டத்தின்பேரில் கோ ஜோங் லிஹ் (இடது) மீது 23 குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவன இயக்குநர் ஒருவரிடமிருந்து கையூட்டு பெற்றதன் பேரில் பள்ளி ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட கோ ஜோங் லிஹ், 61, செயிண்ட் அந்தோனிஸ் கனோசியன் உயர்நிலைப் பள்ளியில் செயல்பாட்டு நிர்வாகியாகப் பணியாற்றினார்.

முன்னாள் காவல்துறை அதிகாரி என அறியப்படும் திரு கோ மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி மொத்தம் 23 குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘அட்வெண்ட் சொலியூஷன்ஸ் அன்ட் புரோஜெக்ட்ஸ்’ நிறுவன இயக்குநர் லூ வெய் கியட்டிடம் கையூட்டு பெற்றதன் தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

எல்இடி ஒளித்திரைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள ‘அட்வெண்ட் சொலியூஷன்ஸ்’ நிறுவனம், மேற்கூறப்பட்ட உயர்நிலைப் பள்ளியுடனான அதன் வர்த்தக ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் அந்தக் கையூட்டுகள் கொடுக்கப்பட்டன.

பிப்ரவரி 2020க்கும் டிசம்பர் 2021க்கும் இடையே, லூவிடமிருந்து $9,500 பெறுமானமுள்ள கையூட்டுகளை கோ கடன் வடிவில் பெற்றதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு, தனது செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.

பள்ளியை ஏமாற்ற வெவ்வேறு ஆவணங்களைப் பயன்படுத்தியதன் தொடர்பில் கோ மீது மற்ற 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளில் 10, வெவ்வேறு தனிச்சம்பவங்களுக்கான தொகுப்புக் குற்றச்சாட்டுகளாக உள்ளன.

2017க்கும் 2021க்கும் இடையே லூ தந்த அந்த ஆவணங்கள், பல்வேறு வேலைப்பாடுகளின் விவரங்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில் அந்த வேலைப்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. லூமீதும் லஞ்சம் கொடுத்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அடுத்ததாக இந்த வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதி விசாரிக்கும்.

நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $100,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்