தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியருக்கு 10 மாதச் சிறை

1 mins read
8f01ebf0-3dfd-42ae-b1c8-0ba55994222b
லயனல் லோ ஜுன் ஜீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்புற வடிவமைப்பு நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லயனல் லோ ஜுன் ஜீ, 36, என்ற அந்த ஆடவர், தன் நண்பரும் போர்க்காலப் படை வீரருமான 38 வயது ரெக்ஸ் ஜாங்குடன் இணைந்து இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜாங், அப்போது உட்புற வடிவமைப்புத் துறையில் தன்னுரிமைத் தொழிலாளராக இருந்துவந்தார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக லோ பணிபுரிந்தார். அப்போது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்த குத்தகைகளை ஏலம் எடுக்க ‘லின் ஐடி’ குழுமத்திற்குச் சில ரகசியத் தகவல்களை அளித்து உதவி புரிந்ததாக கூறப்பட்டது.

அதற்காக, அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த 52 வயது ஜோசஃப் ஆங்கிடமிருந்து கிட்டத்தட்ட $474,500 பணத்தை லோ லஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்தை 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் அதே ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் லோ புரிந்ததாக சொல்லப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையும் குற்றச்செயல் மூலம் கிடைத்த ஆதாயங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் லோ செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் லோமீது சுமத்தப்பட்ட மற்ற நான்கு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

லோ இந்தக் குற்றத்தைப் புரிந்தபோது, சிங்கப்பூர் ஏர்லைன்சில் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்