நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியையொட்டி லிட்டில் இந்தியாவில் அக்டோபர் முழுதும் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் அறிமுகம் காண்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் லிட்டில் இந்தியாவில் இடம்பெறும் தீபாவளி ஒளியூட்டு விழா இவ்வாண்டு ‘தீபாவளித் திருவிழா’ என்ற பெயருடன் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடந்த செய்தியாளர் சந்திப்பில், புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள புதிய மரபுடைமை நடைப்பயண அனுபவம் மக்களைக் கவருமென நம்பப்படுகிறது.
“மெய்நிகர் கண்ணாடிகள்வழி 1800களில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், லிட்டில் இந்தியா ஆர்க்கெட், தேக்கா சந்தை ஆகியவை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை மக்களால் கண்டுகளிக்க முடியும்.
“அதன்வழி மக்கள் அனைவரும் லிட்டில் இந்தியாவின் வரலாறு குறித்து ஆழமாகத் தெரிந்துகொள்ள முடியும்,” என்று ‘தீபாவளித் திருவிழா’ ஏற்பாட்டுக்குழுத் தலைவர் காயத்ரி ஜி ஷர்மா கூறினார்.
அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதிவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டு அவசியம். மூத்த குடிமக்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் உண்டு.
இவ்வாண்டு புதிதாக ‘லிட்டில் இந்தியா நிழற்படச் சவால்’ என்ற அங்கமும் அறிமுகமாகிறது.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அந்த அங்கத்தில், லிட்டில் இந்தியாவில் உள்ள 10 இடங்கள் ஒவ்வொரு வாரமும் மக்களுக்குச் சமூக ஊடகம்வழி தெரிவிக்கப்படும்.
அவ்விடங்களுக்குச் சென்று சிறந்த நிழற்படங்களை எடுக்கும் பங்கேற்பாளர்கள் குலுக்கல் முறையில் $150 வரையிலான பற்றுச்சீட்டுகளை வெல்லலாம். நிழற்படச் சவாலுக்கு அனுமதி இலவசம்.
இந்தப் புதிய அம்சங்களுடன் மக்கள் குடும்பமாகப் பங்கெடுக்க பித்தளை விளக்கு செதுக்குதல், களிமண் விளக்கு சாயம் தீட்டுதல், மசாலா கலவைப் பயிலரங்கு போன்ற நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இசை நிகழ்ச்சிகள், ‘பிக் பஸ்’ தீபாவளிச் சுற்றுலாக்கள், சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ நடவடிக்கைகள், தீபாவளிச் சந்தை போன்ற அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
இவ்வாண்டிற்கான ஒளியூட்டு அலங்காரங்கள், ராமர் சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வந்த வெற்றியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
“கடந்த ஆண்டு உலகம் பல பூசல்களையும் சவால்களையும் சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்தும் வாழ்வில் நம்பிக்கை இருந்தால்தான் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
“தீபாவளி என்பது இருள் நீங்கி வெளிச்சமும் நம்பிக்கையும் பிறக்கும் ஒரு விழாவாகக் கருதப்படுகிறது. ஆகையால், சவால்களை நம்பிக்கையுடன் எதிர்நோக்கினால் வெற்றி கிட்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் ராமர் கதையை அலங்காரக் கருப்பொருளாக்கலாம் என எண்ணினோம்,” என்றார் லிஷா துணை தலைவர் கீர்த்தி இராஜேந்திரன்.
நிகழ்ச்சிகளைக் குறித்த மேல் விவரங்கள் அறிய deepavali.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.
செய்தியாளர் சந்திப்பில் லிஷா மூன்று அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இளையர்களிடையே தொழில்முனைப்பையும் தலைமைத்துவத்தையும் அதிகரிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த தமிழர் பேரவையுடனும் சமூக ஆதரவுத் திட்டங்களை அதிகரிக்க முனீஸ்வரன் சமூகச் சேவைகள் அமைப்புடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
உடல்நலனைப் பேணும் திட்டங்களை அறிமுகப்படுத்த ‘ஃபிட் மந்த்ராஸ்’ அமைப்புடனும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
‘தீபாவளித் திருவிழா’, பர்ச் சாலையில் சனிக்கிழமை (அக்டோபர் 3) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
