ஃபார்முலா 1 கார்ப் பந்தயத்திற்கு மட்டும் பானக்கலன்களை திருப்பி ஒப்படைக்கும் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போட்டியை நடத்தும் சிங்கப்பூர் கிராண்ட் ஃபிரிக்ஸ் தனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கார்ப் பந்தய வட்டாரத்திற்குள் விற்பனை செய்யப்படும் பெட் போத்தல்களுக்கு 10 காசு பிசிஆர்எஸ் முத்திரை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மறுசுழற்சித் தொட்டிகளில் காலி பெட் போத்தல்களைப் போடுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே எஃப்1 போட்டிக்குப் பானக்கலன்களை திருப்பி ஒப்படைப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை தேசியச் சுற்றுப்புற வாரியம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
பிசிஆர்எஸ் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே எஃப் 1 சிங்கப்பூர் போட்டி நடைபெறுவதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக வாரியம் விளக்கமளித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய ஆறு மாத சோதனைக் காலத்திற்குப் பிறகு இத்திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வந்தது.
“சிங்கப்பூர் கிராண்ட் ஃபிரிக்ஸ் வட்டாரத்திற்குள் உள்ள உணவு, பான விற்பனையாளர்களுக்கும், அப்பகுதியில் விற்கப்படும் பானங்களுக்கும் 10 காசு பிசிஆர்எஸ் வைப்புத்தொகையை வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,” என்று வாரியம் மேலும் தெரிவித்தது.
இணையத்தளத்தைத் தவிர, சிங்கப்பூர் கிராண்ட் ஃபிரிக்ஸ் தனது கைப்பேசி செயலி மூலமாகவும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறது.
2026 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ், இம்முறை ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக் கேட்டை எதிர்நோக்குகிறது. ஆனால் போட்டிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
