தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தடையை எதிர்கொள்வதில் முழுமைத் தற்காப்புப் பயிற்சி 2025 கவனம்

3 mins read
760e1cf9-4567-4fa1-9dc9-dfa657a782b9
நடமாடும் மின்னாக்கியை நிறுவுவது குறித்துச் செய்துகாட்டிய எஸ்பி குழுமப் பணியாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நெருக்கடிகளையும் இடையூறுகளையும் எதிர்கொள்ளும்படியான விழிப்புணர்வை சிங்கப்பூரர்களிடம் ஏற்படுத்த சென்ற ஆண்டு ‘எக்சர்சைஸ் எஸ்ஜிரெடி’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

அத்திட்டம் மீண்டும் இவ்வாண்டு முழுமைத் தற்காப்புப் பயிற்சியுடன் இணைந்து இடம்பெறவிருக்கிறது.

‘இடையூறுகளுக்கு நீ தயாரா’ என்ற கருப்பொருளுடன், மின்தடையில் கவனம் செலுத்தும் வண்ணம், இணையப் பாதுகாப்பு, சமூகத்தின்மீது அக்கறை ஆகிய அம்சங்களுடன் தற்காப்பு அமைச்சு இப்பயிற்சியை எரிசக்திச் சந்தை ஆணையத்துடன் இணைந்து நடத்தவுள்ளது.

எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படும் இப்பயிற்சி கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்நோக்கிய இடையூறுகள், நெருக்கடிகள், முன்னோக்கிச் செல்லும் வேளையில் சிங்கப்பூர் என்னென்ன சவால்களைச் சந்திக்கும் ஆகியவற்றைப் பற்றி சிங்கப்பூரர்களைச் சிந்திக்க அழைப்பது மட்டுமன்றி, இதுபோன்ற சவால்மிக்க நேரத்தில் சிங்கப்பூரர்கள் பிறர்மீது அக்கறை செலுத்தும் வாய்ப்பாகவும் அமையும்.

மின்சார அமைப்புக் கட்டுப்பாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 24) இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல்கள் பகிரப்பட்டன.

முழுமைத் தற்காப்பு பயிற்சியை முன்னிட்டு அடுத்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி நிறைவுபெறும் இந்த இரண்டு வாரப் பயிற்சியில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பள்ளிகளும் வெவ்வேறு இடையூறு, நெருக்கடி உண்டாக்கும் பாவனை நடவடிக்கைகளைச் செயல்படுத்த உள்ளன.

வழிகாட்டு காணொளி

நெக்சஸ் செயலகம் இணையவழித் தகவல் திருட்டு எவ்வாறு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பது குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் https://go.gov.sg/sgreadyvideo இணையத்தளம் மூலம் அக்காணொளியைப் பார்த்து, நெருக்கடியான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

https://go.gov.sg/sgreadygowhere இணையத்தளம் மூலம் பொதுமக்கள் நடவடிக்கைகளை ஒட்டிய மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பாவனைப் பயிற்சிகள்

இந்த இருவார காலகட்டத்தில் பல்வேறு பள்ளிகள், பொது அமைப்புகள், சமூக, நிர்வாக நிறுவனங்கள் பாவனைப் பயிற்சிகளை செயல்படுத்தவுள்ளன. சிங்கப்பூர்க் கட்டமைப்பை உருக்குலைக்கவல்ல பெரிய அளவிலான பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

இணையத் தாக்குதலால் ஏற்படும் மின்தடை பாவனைப் பயிற்சி உச்ச நீதிமன்றம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகம், மத்திய தீயணைப்பு நிலையம் போன்ற 20க்கும் மேற்பட்ட முக்கியக் கட்டடங்களில் நடத்தப்படும். ரயில் சேவை செயல்படாத நேரத்தில் சிட்டிஹால், புதிதாகத் திறக்கப்படவுள்ள ஹியூம் (Hume) ஆகிய இரு ரயில் நிலையங்களில் மின்தடை ஏற்படுவது போன்ற பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

பின்னிரவு 1 மணியிலிருந்து 3.30 மணிவரை அங்கு நடத்தப்படும் பயிற்சியில் 300 சமூகப் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வர். இணையத் தாக்குதலால் ஏற்படும் மின்தடைச் சூழலால் மக்கள் எவ்வாறு ரயில் நிலையங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்தப் பயிற்சி நடத்தப்படும்.

மேடைப் பயிற்சி

மேப்பல்ட்ரீ பிஸ்னஸ் சிட்டி போன்ற பெரிய நிறுவனங்கள் மின்தடை பாவனைப் பயிற்சியையும், மேடைப் பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளன.

மின்தூக்கியிலிருந்து மீட்பு

முழுமைத் தற்காப்பு நாளன்று மின்தடை ஏற்பாட்டாலும் மின்தூக்கியில் அவசர மருத்துவ சேவையை வழங்கும் நடவடிக்கைக்கு அது ஒரு தடையன்று என்பதைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இணையவழித் தகவல் திருட்டு

முதன்முறையாக தற்காப்பு அமைச்சு சிங்கப்பூர் தொழில் கூட்டமைப்புடன் கைகோத்து 200 சிறிய, நடுத்தர நிறுவனங்கள்மீது இணையவழித் தகவல் திருட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. நிறுவனங்கள் தங்களின் இணைய மீள்திறனை மேம்படுத்துவதும், தொழில் தொடர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதும் இதன் நோக்கமாகும்.

கழகங்களுக்கு இணைய மீள்திறன் வழிகாட்டி

சிங்கப்பூர் இயக்குநர்கள் சங்கம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தேசிய கணினி அமைப்புமுறை, இஸ்தாரி இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து கழகங்களுக்கான இணைய மீள்திறன் வழிகாட்டி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளன.

நெருக்கடி நேரத்தில் பிறருக்கு உதவுதல்

சிங்கப்பூரர்கள் நெருக்கடி காலங்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மூத்தோருக்கு சமூக ஆதரவு வழங்க விரும்புபவர்கள் தொண்டூழியர்களாகப் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, துடிப்பான மூப்படைதல் நிலையங்கள் ஆகியவற்றை அணுகி அவர்கள் தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

கல்வி அமைச்சு பள்ளிகளில் முழுமைத் தற்காப்பு

பள்ளிகள் இப்பயிற்சிகளில் பங்கேற்க பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன. மின்தடை காரணமாக உணவு சமைக்க முடியாமல் போகும்போது, உயர்நிலைப் பள்ளிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.

பங்கேற்க ஆர்வம் இருந்தால்

இதையொட்டி தானாக மேடைப் பயிற்சி மேற்கொள்ள விருப்பம் இருக்கும் நிறுவனங்கள் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் https://go.gov.sg/esr25cyberttx, https://go.gov.sg/esr25powerttx என்ற இணையத்தளங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ளலாம்.

“கடந்த ஆண்டு இப்பயிற்சிக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. முழுமைத் தற்காப்பை செயல்படுத்தும் வகையில் நாம் இந்த பாவனைப் பயிற்சிகளைச் சேர்த்துள்ளோம். நம் நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதில்லை என்றாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” என்று தற்காப்பு அமைச்சின் கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் ஃபிரடெரிக் சூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்