சைனாடவுன் காம்பிளக்ஸ் உணவு நிலையத்தில் சென்ற வாரம் காற்றுப்போக்கிகள் செயலிழந்ததால் குறைந்தது பத்துக் கடைகள் பாதிக்கப்பட்டன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அந்தப் பிரச்சினை ஜூன் 17, 18ஆம் தேதிகளில் தொடங்கியதாக சைனாடவுன் காம்பிளக்ஸ் உணவங்காடிக்காரர்கள் சங்கம் கூறியது.
அதனை ஜாலான் பெசார் நகர மன்றம் கையாண்டுவருவதாகவும் தேவையான பழுதுபார்ப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதாகவும் அது சொன்னது.
பாதிக்கப்பட்ட கடைகள் உணவு நிலையத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதாகச் சீன நாளிதழான ‘8வொர்ல்டு’ கூறியது.
இந்நிலையில், உதிரிப் பாகங்கள் இல்லாததால், பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவுபெற இரண்டு மாதங்கள் ஆகக்கூடும் என்று உணவுக் கடைக்காரர் ஒருவரிடம் தெரிவிக்கப்பட்டதாகச் சீன நாளிதழான சாவ்பாவ் கூறியது.
புகையால் உணவங்காடிக்காரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் அல்லது மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படலாம் என்று அவர் அக்கறை தெரிவித்தார்.
கண் பிரச்சினை உடைய 68 வயதான மற்றோர் உணவங்காடிக்காரர் தம்மால் இரண்டு மாதங்கள் காத்திருக்கமுடியாது என்று கூறினார். புகையிலிருந்து தப்பிக்க கடையை இரண்டு வாரங்களுக்கு மூடுவது குறித்து யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் வெப்பம், அசௌகரியம் ஆகியவை குறித்து உணவங்காடிக்காரர்கள் முக்கியமாகக் கவலை தெரிவித்ததாகச் சங்கம் கூறியது. உணவு சமைக்கும் கடைகளை நடத்துவோருக்கு அதிகப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“காற்றோட்டத்தை மேம்படுத்தவும் வெப்பத்தைக் குறைக்கவும் கூடுதல் விசிறிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தற்காலிக நடவடிக்கைகள் குறித்து சில உணவங்காடிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிகிறோம்,” என்று சங்கத்தின் தலைவர் கார்னிலியஸ் டான் கூறினார்.

