ஜூரோங் ஏரிக்கரை வட்டாரத்தில் 2027ல் திறக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புதிய சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் மாதிரியைக் காட்சிப்படுத்தும் புதிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
‘புதிய அறிவியல் நிலையம்: சிறப்புடன் உங்களுடையது’ என்ற அந்தப் புதிய நிரந்தரக் கண்காட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் திறக்கப்பட்டது.
கல்வி அமைச்சரும் சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டெஸ்மண்ட் லீ கண்காட்சியைத் திறந்துவைத்தார்.
ஆகஸ்ட் 9 முதல் 11 வரை சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் நடக்கும் சிறப்பு அறிவியல் கேளிக்கை விழாவான ‘எஸ்ஜி60 ஸ்டெம் ஃபியெஸ்டா’வின் ஓர் அங்கமாகத் திறப்பு விழா நடைபெற்றது.
அறிவியல் நிலையத்தின் நுழைவாயிலில் இக்கண்காட்சி அமைந்துள்ளது.
“கூடிய விரைவில் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (யுஆர்ஏ) நகரும் கண்காட்சி யுஆர்ஏ நிலையத்திலிருந்து லாட் ஒன், ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதிகளுக்கு அக்டோபர், நவம்பரில் வரும்,” என்றார் அமைச்சர் லீ.
கண்காட்சியின் சிறப்பம்சங்கள்
கண்காட்சியில் சிறப்புக் கண்ணாடிக் காட்சி இடம்பெறுகிறது. புதிய அறிவியல் நிலையத்தின் முக்கிய அங்கமான நடவடிக்கை மையத்தில் (Activity Plaza) அமையவுள்ள கட்டடத்தின் பிரதிபலிக்கும் வெளிப்புறத்தை (reflective surface) இது மாதிரிப்படுத்தும். பொதுமக்களுக்கான பல சமூக நிகழ்ச்சிகள் அந்த மையத்தில் நடக்கும்.
உள்ளூர் வடிவமைப்பு நிறுவனமான 8EyedSpud-ன் கலைப்படைப்பானது அறிவியல் நிலையம், ஜூரோங் ஏரிக்கரை வட்டாரம் இவ்விரண்டின் சின்னங்களைக் காட்சிப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில் அறிவியல் நிலையத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என பொதுமக்களும் மாணவர்களும் விரும்புவதைக் காட்டும் அங்கமும் கண்காட்சியில் இருக்கும்.
‘தேசிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாணவர் சவால் 2025’ல் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகளும் அதில் இடம்பெறுகிறது. அப்போட்டியில் வென்ற செங்ஹுவா உயர்நிலைப்பள்ளி மாணவர் ஏய்டன் சோங், 14, நாம் செய்வதை அப்படியே செய்யும் ரோபாட் கண்காட்சி, புவியீர்ப்புச் சக்தியின்மையை அனுபவிக்க வழிவகுக்கும் கண்காட்சி போன்றவற்றை ஏஐ மூலம் கணினியில் வடிவமைத்துள்ளார்.
“நேரத்தை வேகப்படுத்தினால் என்ன நடக்கும்? பூமி சூரியனைச் சுற்றும் திசை மாறினால் என்ன நடக்கும்?” போன்ற கேள்விகளை ஆராயும் அங்கத்தையும் அவர் குழு கணினியில் வடிவமைத்துள்ளது.
அறிவியல் நிலையத் தொண்டூழியரான சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி ஸ்ரீயா, 15, இயற்கை நடைபாதைகளை அமைக்கப் பரிந்துரைக்கிறார்.
“எவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயற்கையைப் பாதுகாக்கலாம் என்பதை ஆராயலாம். பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிக்கவேண்டும்,” என்றார் பள்ளியின் அறிவியல், சுற்றுப்புற மன்றத் துணைத் தலைவரான அவர்.
ஓராண்டுகாலம் 10,000க்கும் மேற்பட்டோருடன் நிகழ்ந்த கலந்துரையாடல்கள்வழி கிடைத்த கருத்துகள், புத்தாக்க ஆலோசனைகள்மூலம் புதிய அறிவியல் நிலையம் அமைக்கப்படுகிறது.
புதிய அறிவியல் நிலையத்தில், ஒன்றோடோன்று இணைந்திருக்கும் ஐந்து செவ்வக வடிவிலான தொகுதிகள் அமைக்கப்படும். சில தொகுதிகளின் ஓரத்திலுள்ள கண்ணாடிச் சன்னல்கள் ஜூரோங் ஏரிக்கரை, சீனப் பூந்தோட்டத்தின் அழகான இயற்கைக் காட்சிகளைக் காண வழிவகுக்கும்.

