சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, சாங்கி விமான நிலையத்தில் ஓர் இலவசக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் தற்போது உலகத் தரம் வாய்ந்த விமானப் போக்குவரத்து நடுவமாக விளங்குவதற்கு அமரர் லீ ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்கூறும் கண்காட்சி அது.
சனிக்கிழமை (செப்டம்பர் 16) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் ‘கிலௌட்9 பியஸ்ஸா’வில் அதைக் காண முடியும்.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு அது, விமான நிலையத்தின் வேறோரு பகுதிக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கனவு காணும் துணிச்சல் (த கரேஜ் டு டிரீம்) என்று பெயரிடப்பட்டுள்ள கண்காட்சியில், இருவழித் தொடர்புடைய ஆறு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்தின் உருவாக்கம் குறித்த அரிய ஆவணங்கள், கதை சொல்லும் திரைகள் போன்றவை அங்கு இடம்பெறுகின்றன.
பயா லேபார் விமான நிலையத்தின் தொடக்கம் முதற்கொண்டு சாங்கி விமான நிலையத்தின் இன்றைய நிலை வரையிலான வரலாற்றுப் பயண அனுபவத்தை அவற்றில் பெறலாம்.
காத்தோங் சமூக மன்றத்தில் 1970ல் ஆற்றிய உரையில் திரு லீ சாங்கி விமான நிலையம் குறித்து முதலில் குறிப்பிட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தருணத்தின் ஒலிப்பதிவை வருகையாளர்கள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விமான நிலையத்தை பயா லேபாரில் இருந்து சாங்கிக்கு மாற்றுவது தொடர்பில் அமரர் லீயும் அவரது குழுவினரும் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், வருகையாளர்கள் அந்த முடிவு பற்றிப் புரிந்துகொள்ள உதவும்.
சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையம் 1981ல் திறக்கப்பட்டது. அதுகுறித்த ஆவணப் படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
சாங்கி விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்க வேண்டும் என்பது குறித்த திரு லீயின் கண்ணோட்டத்தையும் காட்சிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக கழிப்பறைகளை மிகத் தூய்மையாக வைத்திருத்தல், பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்கும் ஏற்பாடு, விமான நிலைய சுற்றுப்புறத்தில் பசுமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் வருகையாளர்கள் பார்வையிட இயலும். சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுத் திட்டம், ஐந்தாவது முனையம் போன்றவை குறித்து அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
சாங்கி விமான நிலையக் குழும நிர்வாகத்தின் துணைத் தலைவர் ஜேசன் கோ, விமான நிலையத்தை பயா லேபாரில் இருந்து சாங்கிக்கு மாற்ற அப்போது எடுக்கப்பட்ட முடிவு மிகவும் முக்கியமானது, துணிச்சலானது என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான அந்தத் தருணத்தின் தாக்கத்தை இன்றும் உணர முடியும் என்றார் அவர்.


