தனியார் வீட்டிலிருந்து மூன்று அறை அல்லது அதைவிடச் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மாறும் முதியவர்களுக்கான மூத்தோர் வீட்டுவசதி போனஸ் (Silver Housing Bonus) திட்டம் இவ்வாண்டின் இறுதியின்போது விரிவாக்கம் காணவுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மூத்தோர் வீட்டுவசதி போனஸ் திட்டத்திற்குத் தகுதி பெற, மூவறை அல்லது அதைவிடச் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு மாறும் வீட்டுரிமையாளர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்.
அவர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் உரிமையாளர்களாக இருக்கவேண்டும், அல்லது அல்லது 21,000 வெள்ளி வரையிலான ஆண்டு மதிப்புடைய தனியார் வீட்டுரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், புதிய விரிவாக்கத்தின்படி, 21,000 வெள்ளிக்கும் 31,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட மதிப்பு கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களும் இந்த போனஸ் திட்டத்திற்குத் தகுதிபெறுகின்றனர்.
இருந்தபோதும், அத்தகைய வீட்டு உரிமையாளர்களுக்கு நிபந்தனை உள்ளது. மத்திய சேமநிதி லைஃப் திட்டத்தில் சேரும்போது வீடு விற்பனையிலிருந்து பெறப்படும் வருவாயை மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கிற்கு அவர்கள் ரொக்கமாகச் சொலுத்தவேண்டும்.
தற்போது நடப்பிலுள்ள திட்டத்தின்படி, ஓய்வுக்காலக் கணக்கில் பணம், முழு ஓய்வுக்காலத் தொகை வரை (Full Retirement Sum) நிரப்பப்பட்டாலும், மூத்தோர் வீட்டுவசதி போனசுக்குத் தகுதிபெற விரும்பும் மூத்தவர்கள் அந்தக் கணக்கிற்கு 60,000 வரையிலான ரொக்கத்தொகையை செலுத்தவேண்டும்.
ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 1 முதல், திரும்பத் தரப்படும் மத்திய சேமநிதித் தொகை 60,000 வெள்ளியைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் அவர்கள் இந்த ரொக்கத் தொகையைச் செலுத்துவதற்கான தேவை இராது.
சொத்தை வாங்குவதற்கு முன்னதாக மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் அசல் தொகையும் வட்டித்தொகையும் அந்தச் சொத்தின் விற்பனைக்குப் பிறகு மத்திய சேமநிதிக்குத் திரும்பத் தரப்படவேண்டும். அதுவே திரும்பத் தரப்படும் மத்திய சேமநிதித் தொகை என்பதாகும்.
தொடர்புடைய செய்திகள்
திரும்பத் தரப்படும் தொகை, ஓய்வுக்காலக் கணக்கிற்கு முழு ஓய்வுக்காலத் தொகை வரை செலுத்தப்படும். எஞ்சியுள்ள தொகை, சாதாரண கணக்கில் சேரும்.
மூத்தோர் வீட்டுவசதி போனசின் நீட்டிப்பு மூலம் முதியவர்கள் மேலும் எளிதில் ஆதாயமடைவர் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதன்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய வளர்ச்சி அமைப்புக்கான விவாதத்தின்போது திரு லீ அவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி மூத்தோர் வீட்டுவசதி போனஸ் (Silver Housing Bonus) திட்டத்தின்கீழ் 2,535 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு ஏறத்தாழ 61 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் வீடுகளிலிருந்து மூன்று அறை அல்லது அதைவிட சிறிய வீடுகளுக்கு மாறும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மாறிய முதியவர்கள் எவரும் இதுவரை மூத்தோர் வீட்டுவசதி போனஸ் பெறவில்லை என்றது தேசிய வளர்ச்சி அமைச்சு.
அத்துடன், 21,000 வெள்ளிக்கும் 31,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட ஆண்டு மதிப்புள்ள வீடுகளிலிருந்து வீடு மாறும் முத்தோருக்கும் அரசாங்கம், மூத்தோர் வீட்டுவசதி போனசை நீட்டிக்கவுள்ளது. இதன் மூலம், குறைந்த மதிப்புள்ள தனியார் வீடுகளில் வாழும் முதியவர்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
இந்த விரிவாக்கம் வழியாக, கூடுதலாக 15,000க்கும் மேற்பட்ட மூத்தவர்கள் இந்த போனஸ் திட்டத்திற்குத் தகுதிபெறுகின்றனர். வீட்டு உரிமையாளர்களில் முக்கால் பங்கினரை இந்தத் திட்டம் இப்போது உள்ளடக்கும்.
21,000 வெள்ளிக்கும் 31,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட ஆண்டு மதிப்புள்ள தனியார் வீடுகளில் வசிக்கும் மூத்தவர்கள், ஈரறை வீடுகளுக்கு அல்லது அதனைவிட சிறிய வீடுகளுக்கு (சிசிஏ எனும் சமூகப் பராமரிப்பு வீடுகள் உட்பட) மாறினால் அவர்களுக்கு 10,000 வெள்ளி கூடுதலான போனஸ் பெறுவர்.