தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தாண்டி, திறமைகளை வெளிக்கொணர்தல், திறன்களை வளர்த்தல், மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிபர் சவால் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
நீடித்த நிதியாதரவை உறுதிப்படுத்துவதுடன், அதிபர் சவால் கலை, விளையாட்டு ஆகிய துறைகளிலும் கவனத்தை விரிவுபடுத்தவுள்ளதாகவும் கூறினார் அதிபர் தர்மன்.
வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை நாடுவோருக்கான ஆதரவு, சமூக வல்லுநர்களுக்கான ஆதரவு, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சிறந்து விளங்குவோர்க்கான அங்கீகாரம் உள்ளிட்டவை மூலம் சமூகத் துறைகளில் புதிய அணுகுமுறைகளை உருவாக்கும் அதிபர் சவால் வல்லுநர் திட்டத்தையும் அவர் (Fellowship) அறிவித்துள்ளார்.
மே 28 ஆம் தேதி காலாங் ஆக்டிவ் எஸ்ஜி வலைப்பந்து மையத்தில் நடைபெற்ற அதிபர் சவால் 2025 இன் தொடக்க விழாவில் அவர் இவை குறித்து அறிவித்தார். இத்திட்டத்துக்கான புதிய சின்னமும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
“சிங்கப்பூரில் பல திறமைகள் வெளிவராமல் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றன. அவை பெரும்பாலும் தற்செயலாக வெளிவந்து பெரிதாகத் தழைக்கும். அத்தகைய திறமைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது நம் கடமை,” என்றார் அதிபர் தர்மன்.
கலை, விளையாட்டுகளுக்கான உதவித் நிதித் திட்டங்களும் விரிவடையும் என்றும், பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்ட பல போட்டிகளும் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
“இத்திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எண்களால் அளவிட முடியாதவை என்றாலும், மரியாதை, திறன், பங்களிப்பு ஆகிய அளவிடமுடியாத மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை அடைந்துள்ளோம்,” என்றார்.
இவை ஒற்றுமையை வளர்த்து, மாறுபட்ட பின்புலங்களையும் சூழலையும் உணர்ந்து, ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கும் தன்மையை உருவாக்கும் என்றும் அதிபர் குறிப்பிட்டார். அதுவே சமூக மேம்பாட்டுக்கான சக்திவாய்ந்த வழி என்றும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட அதிபர் சவாலுக்குக் கீழ் வரும் இத்திட்டம் சமூகத் துறை வல்லுநர்களுக்கு, அவர்களின் நிபுணத்துவத்தை ஆழப்படுத்தவும், புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும் ஏதுவாக ஓராண்டு முதல் ஈராண்டு வரையிலான முழு அல்லது பகுதிநேர ஓய்வினை அளிக்கும்.
பெரிய பின்னடைவுகளுக்குப் பின் புதிய பணி அல்லது வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்புவோர்க்குக் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் பயிற்சி ஆகிய வழிகளில் இத்திட்டம் ஆதரவு அளிக்கும். தொழில்நுட்பக் கல்வி கற்று, பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சிறந்து விளங்கியவர்களின் சாதனைகளை இத்திட்டம் அங்கீகரிக்கும்.
தேசியக் கலை மன்றம், ‘ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி’ ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பின்தங்கிய பின்னணியிலிருந்து வருவோரிடமுள்ள திறமைகளைக் கண்டறியவும், அதனை ஊக்குவிக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
மேலும் 52 அமைப்புகளைச் சேர்ந்த 60 திட்டங்களுக்கு அதிபர் சவால் நிதியாதரவளிக்கும். இதில் குறிப்பிடத் தகுந்த சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆறு திட்டங்களுக்கு, ஐந்து ஆண்டுகளாகப் பிரித்து வழங்கப்படும் 715,000 வெள்ளி முதல் 1,250,000 வெள்ளி வரையான பெருநிதி ஆதரவும் அடங்கும்.
‘நெட்பால் ரைசிங்’ எனும் வசதி குறைந்த சமூகத்துக்கான வலைப்பந்து கற்கும் வாய்ப்பளிக்கும் திட்டம், ‘ஓப்பன் மைண்ட்ஸ், ஓபன் டோர்ஸ்’ எனும் உடற்குறையுள்ளோர்க்கான விளையாட்டு, ஒன்றுகூடல் வாய்ப்புகள் உள்ளிட்ட 54 திட்டங்களுக்குத் தலா 105,000 வெள்ளி முதல் 300,000 வெள்ளி வரை மூன்றாண்டுகளுக்குப் பிரித்து வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கான நிதித்திரட்டை ஊக்குவிக்க, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘எஸ்ஜி கிவ்ஸ் மேட்சிங் கிராண்ட்’ எனும் திட்டத்தின்படி, நன்கொடையாக அளிக்கப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கத்தின் சார்பில் ஒரு வெள்ளி வழங்கப்படும்.
ஆண்டுக்குக் குறைந்தது 250,000 வெள்ளி என்று, தொடர்ந்து மூன்றாண்டுகள் நன்கொடையளிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒரு வெள்ளிக்கு 1.5 வெள்ளி வீதம் அரசாங்கம் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உடற்குறையுள்ளோர்க்கான குதிரையேற்றம், குதிரைகள் உதவியுடன் அமைந்த சிகிச்சைகளை இலவசமாக வழங்கிவரும் ‘ரைடிங் ஃபார் டிஸேபிள்டு’ அமைப்பு இவ்வாண்டு முதன்முறையாக அதிபர் சவால் திட்டத்தில் இணைந்துள்ளது.
அவ்வமைப்பின் பொது மேலாளர் ஜெரால்டு சிவலிங்கம், “எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை ஏறத்தாழ 8000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பெரும்பாலும் சமூக நிதித்திரட்டின் உதவியுடன் செயல்படும் எங்களுக்கு இத்திட்டன் மூலம் கிடைக்கும் நிதி பெரிதும் ஆதரவளிக்கும்,” என்றார்.
மேலும், “கலை, விளையாட்டு உள்ளிட்ட உடல், மனநலப் பிரச்சினைகள், வசதி குறைந்தோர் எனச் சமூகத்தின் பல அடுக்குகளுக்கும் உதவும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நோக்கிய பயணத்தின் முக்கிய அம்சம்,” என்றும் குறிப்பிட்டார்.

