சிங்கப்பூரில் கூடுதலான மருந்துக் கடைகள் சளிக்காய்ச்சலுக்கான மருத்து மாத்திரைகள் விற்கும் சேவையைப் பொதுமக்களுக்கு விரைவில் வழங்கவுள்ளன.
அதற்கான முன்னோட்டத் திட்டம் கை மேல் பலன் அளித்துள்ளதை அடுத்து அதை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது.
கார்டியன் ஹெல்த் & பியூட்டி, யுனிட்டி ஃபார்மசி, வாட்சன்ஸ் சிங்கப்பூர் ஆகிய மூன்று முக்கிய மருந்துக் கடைகள் சுகாதார அமைச்சிடமிருந்து ஒப்புதலைப் பெற்ற பிறகு சளிக்காய்ச்சலுக்கான மருந்துகளை அவற்றின் கிளைகளில் விற்பனை செய்யும் சேவையை வழங்கும்.
இதை நிரந்தரமாக்குவது இன்னும் முடிவெடுக்கப்படாததால் சுகாதார அமைச்சு அடுத்த ஓராண்டுக்குத் திட்டத்தை நீட்டிக்கும்.
சளிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழக்கமாக தனியார் பொது மருந்தகங்கள், பயண மருந்தகங்கள் அல்லது பலதுறை மருந்தகங்களில் மட்டுமே வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று மருந்துக் கடைகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான முன்னோட்டத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு அறிமுகம் செய்தது.
சிராங்கூனில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் இருக்கும் கார்டியன், மரின் பரேட்டில் உள்ள பார்க்வே பரேட்டின் யுனிட்டி, ஆர்ச்சர்ட்டில் உள்ள பெரகான் கடைத்தொகுதியில் உள்ள வாட்சன்ஸ் ஆகியவற்றில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
சுகாதார அமைச்சு அத்தகைய சமூகச் சேவைகளைச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் சட்டத்தின்கீழ் கொண்டுவரும்வரை ஓராண்டுக்கு முன்னோட்டத் திட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆறு மாதத் தரவுகளைச் சேகரித்து முன்னோட்டத் திட்டம் எந்த அளவு பயனளித்துள்ளது என்பதைச் சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும் என்று இவ்வாண்டு மார்ச் மாதம் சொன்னது.
அந்த முன்னோடித் திட்டம் இன்னமும் மதிப்பிடப்படுவதாக சுகாதார அமைச்சு உறுதிசெய்தது. பொதுமக்களின் வரவேற்பை அடுத்து எதிர்வரும் சளிக்காய்ச்சல் காலகட்டத்தில் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி கிட்டத்தட்ட 1,200 சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வழங்கும் சேவை எட்டு மருந்துக் கடைகளில் செயல்படுத்தப்பட்டன.
அது சுகாதார அமைச்சு நிர்ணயித்த 200 என்ற இலக்கைக் கடந்துவிட்டது.
கிட்டத்தட்ட 87 விழுக்காட்டுத் தடுப்பு மருந்துகள் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்பட்டன. சமூகச் சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் (சாஸ்) செயல்படும் பொது மருந்தகத்தில் வழங்கப்படும் அதே கழிவுகளை மருந்துக் கடைகளிலும் அவர்கள் பெற்றனர்.