தானா மேரா - தெம்பனிஸ் ரயில்கள் 4 நாள்களுக்கு நிறுத்தப்படுவதால் மாற்று ஏற்பாடுகள்

1 mins read
28648fe8-343f-462e-a578-fe640fe2326a
தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் டிசம்பர் 7 முதல் 10 வரை தானா மேரா - தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே ரயில்கள் ஓடாது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தண்டவாள மேம்பாட்டுப் பணிகளுக்காக தானா மேரா, தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 7 முதல் 10 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும்.

அந்த நிலையங்களில் கூட்டம் இருக்கும் என்பதால், அதனால் பாதிக்கப்படும் பயணிகள் நீண்டநேரப் பயணத்திற்குத் திட்டமிடுமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது.

அவ்விரு நிலையங்களுக்கும் இடையில் இணைப்புப் பேருந்து சேவை வழங்கப்படும் என்றும் அது புதன்கிழமை (டிசம்பர் 4) கூறியது.

அந்த நான்கு நாள் பயணச் சேவை நிறுத்தம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைப்புப் பணிமனையுடன் கிழக்கு-மேற்கு ரயில் தடத்தை (EWL) இணைப்பதற்காக தண்டவாளங்களில் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இணைப்புப் பேருந்து சேவை எண் 7, தெம்பனிஸ், சீமெய், தானா மேரா நிலையங்களுக்கு இடையில் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் இயங்கும்.

ஒவ்வொரு நாளும் 55 ஈரடுக்குப் பேருந்துகளும் பயண இணைப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஆணையம் தெரிவித்து உள்ளது.

எம்ஆர்டி பயணத்திற்கான அதே கட்டணம் அந்த இடைவழிப் பேருந்துகளிலும் வசூலிக்கப்படும்.

பாதிக்கப்படும் நிலையங்களிலும் இடைவழிப் பேருந்து நிறுத்தங்களிலும் கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்