எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் குழுத் தொகுதிகளில் பன்முனைப் போட்டியை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது ஆறு குழுத் தொகுதிகளில் களமிறங்க வெவ்வேறு எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
ஐந்து குழுத் தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அவை அங் மோ கியோ, நீ சூன், பாசிர் ரிஸ்-பொங்கோல், செம்பவாங், தஞ்சோங் பகார் ஆகிய குழுத் தொகுதிகளாகும்.
தெம்பனிஸ் குழுத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட தொகுதிகளில் களமிறங்குவது தொடர்பாக முன்கூட்டியே ஆர்வம் காட்டுவதன் மூலம், தொகுதிகளின் எல்லை உறுதி செய்யப்பட்டதும் மற்ற கட்சிகளுடன் பேரம் பேசும் உத்தி கையாளப்படுவதை அரசியல் நிபுணர்கள் சுட்டினர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பத்து எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டியுள்ளன.
அவற்றில் மூன்று, சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவை.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பொதுத் தேர்தலிலும் பத்து எதிர்க்கட்சிகள் போட்டியிட்டன.
ஆனால் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியைத் தவிர மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை.
சிங்கப்பூர் தேர்தல்களில் பன்முனைப் போட்டி நிலவுவது மிகவும் அரிது.
அது வாக்குகளைச் சிதறடித்து ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
கடந்த 37 ஆண்டுகளில் இருமுறை மட்டுமே பன்முனைப் போட்டி நிலவியுள்ளது.
ஆனால் தனித் தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவுவது அரிதல்ல.
அண்மையில் சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணியிலிருந்து மக்கள் சக்திக் கட்சி விலகியது.
இதையடுத்து, தெம்பனிஸ் குழுத் தொகுதி, நீ சூன் குழுத் தொகுதி, அங் மோ கியோ குழுத் தொகுதி, இயோ சூ காங் தனித் தொகுதி ஆகியவற்றில் மக்கள் சக்திக் கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனரும் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் அறிவித்தார்.
இதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது.
2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்கள் சக்திக் கட்சி திட்டமிட்டபடி நடந்தால் பொதுத் தேர்தலில் அக்கட்சி சார்பாக 16 வேட்பாளர்கள் களமிறங்கக்கூடும்.

