முதியோர் பலரும் தம் வயதான காலத்தை அவரவர் குடியிருப்புகளிலேயே செலவிட விரும்பும் நிலையில், அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தனது ஆற்றல்களை மேம்படுத்தி வருகிறது பிசிஎஃப்.
எதிர்காலத்தில் பிசிஎஃப் அமைப்பு தீவு முழுவதும் கூடுதலான துடிப்பான மூப்படைதல் நிலையங்களையும் மூத்தோர் பராமரிப்பு நிலையங்களையும் நடத்துவதை எதிர்பார்க்கலாம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
அரசாங்கம் தொடர்ந்து குடும்பங்களை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரிக்கும் என்றும் வலியுறுத்தினார் பிரதமர் வோங்.
ஏற்கெனவே, பல பாலர்பள்ளிகளையும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் நடத்தும் பிசிஎஃப், இதன்வழி தலைமுறையினருக்கிடையே பாலமாக அமையும் என்றார் அவர்.
ஜூலை 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த பிசிஎஃப் குடும்ப தினத்தன்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரதமர் வோங் அவ்வாறு கூறினார்.
தற்போது ‘பிசிஎஃப் ஸ்பார்கல் கேர்’ எனும் பிசிஎஃப்ஃபின் முதியோர் பிரிவு, ஒன்பது மூத்தோர் பராமரிப்பு நிலையங்களையும் நான்கு துடிப்பான மூப்படைதல் நிலையங்களையும் தீவு முழுவதும் நடத்தி வருகிறது.
அத்தகைய ஒரு நிலையமான பிசிஎஃப் ஷுன்ஃபூ துடிப்பான மூப்படைதல் நிலையத்தில் வழக்கமாக வாரத்தில் ஐந்து நாள்களும், - சில சமயம் ஆறு நாள்கள்கூட, சென்று வருகிறார் சரஸ்வதி ரத்தினவேலு, 73.
சாங்கி விமான நிலையத்தில் ‘சேட்ஸ்’ நிறுவனத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றியபின் ஓய்வுபெற்றார் அவர். 22 ஆண்டுகளுக்கு முன் கணவரையும் இழந்ததால், ஓய்வுக்காலத்தில் அவர் பெரும்பாலும் தனியாகத்தான் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு நாள் பிசிஎஃப்பிலிருந்து என் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி என்னை அவர்கள் நிலையத்தின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வரவேற்றார்கள். 2017லிருந்து இன்றுவரை நான் அங்குத் தவறாமல் சென்றுகொண்டிருக்கிறேன். அங்கு நாற்காலி யோகா, யுகிலேலே வகுப்புகள், காப்பி நேரம், கேரம் விளையாட்டு எனப் பல நடவடிக்கைகள் உள்ளன. சில சமயம் வெளியேகூட எங்களை அழைத்துச் செல்வார்கள்,” என்றார் சரஸ்வதி.
மாதந்தோறும் முதியோரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது தமக்குப் பிடித்தவற்றில் ஒன்று என்றார் சரஸ்வதி. தன் அண்டைவீட்டாரையும் தன்னுடன் மூத்தோர் பராமரிப்பு நிலையத்திற்கு அவர் அழைத்து வந்துள்ளார்.
“என் கணவர் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் பதிவான காற்பந்து நடுவராக இருந்தார். செயின்ட் வில்ஃப்ரெட் காற்பந்துத் திடலில் ஒரு காற்பந்தாட்டத்தின்போது நடுவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் வேளையில்தான் மாரடைப்பு வந்து அவர் இறந்தார். கடைசிவரைத் தன் சீருடையை அணிய வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது.
“நானே சிறுவயதிலிருந்து விளையாட்டில் நாட்டம் கொண்டவளாக இருந்தேன். பள்ளிப் பருவத்தில் ஓடினேன், டிஸ்கஸ் எறிவேன், ஹர்டல்ஸ், போன்ற பல விளையாட்டுகளிலும் ஈடுபட்டேன். பின்னர் விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் காலை 7 மணிவரை வேலையை முடித்தபின் நேரடியாக உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்வேன். அங்கு ஓரிரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தபின்புதான் தூங்குவேன்.
“அதனால், பிசிஎஃப் நிலையத்தில் உடற்பயிற்சி செய்து, புதிய நட்புகளை உருவாக்குவது எனக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது,” என்றார் சரஸ்வதி.
$60,000 நிதி திரட்டு
எஸ்ஜி60ஐ முன்னிட்டு பிசிஎஃப் நடத்திய நிதி திரட்டு முயற்சியையும் பாராட்டினார் பிரதமர் வோங். பிலோசம் சீட்ஸ், பிரைதில் எவர்கிரீன் இல்லம், இரட்சணிய சேனை கிரேஸ்ஹேவன், ஃபுட் ஃபுரோம் தி ஹார்ட், HCSA-SPIN, கிளப் ஹீல் ஆகிய ஆறு அமைப்புகளுக்கு நிதி திரட்டி, ஒவ்வொன்றுக்கும் $10,000 கொடுத்தது பிசிஎஃப்.
பிசிஎஃப் சார்பில் பிரதமர் வோங்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்நிதிக்கான காசோலைகளை வழங்கினர்.