சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் வெப்பமாக இருக்கும் என்றும் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்தது.
சில நாள்கள் மாலைவரை மழை நீடிக்கலாம். அதேபோல் அதிகாலையிலும் சில நாள்கள் மழை இருக்கும் என்றும் அது கூறியது.
பெரும்பாலான நாள்களில் அன்றாட வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் அது 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.
ஏப்ரல் 13ஆம் தேதி சிங்கப்பூரின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்தது. ஈசூன் ரிங் ரோடு வட்டாரத்தில் மழை 117 மில்லிமீட்டராகப் பதிவானது.
ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் அவ்வப்போது மழை பெய்தாலும் கிட்டத்தட்ட 9 நாள்கள் நாட்டின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவோ அதற்கு அதிகமாவோ பதிவானது.
ஆக அதிகமாக ஏப்ரல் 12ஆம் தேதி பாய லேபார் பகுதியில் வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியசாகப் பதிவானது.