கடல்நாக ஆண்டில் எதிர்பார்த்த அளவு குழந்தை பிறப்பு இல்லை

2 mins read
f0dfbd67-3f88-47f7-9931-26d08acc53cc
கடல்நாக ஆண்டான 2024ஆம் ஆண்டு 33,703 குழந்தைகள் பிறந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொதுவாக கடல்நாக ஆண்டில் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பது வழக்கம். ஆனால் இம்முறை அந்த எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இல்லை.

இருப்பினும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு 0.5 விழுக்காடு கூடியுள்ளது.

கடல்நாக ஆண்டான 2024ஆம் ஆண்டு 33,703 குழந்தைகள் பிறந்தன. 2023ஆம் ஆண்டு அது 33,541ஆக பதிவானது. இந்தத் தரவுகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்டது.

இதற்கு முன், 2012ஆம் ஆண்டு கடல்நாக ஆண்டு வந்தபோது 38,641 குழந்தைகள் பிறந்தன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 6.8 விழுக்காடு அதிகரிப்பு.

அதேபோல் 2000ஆம் ஆண்டு கடல்நாக ஆண்டு வந்தபோது 44,765 குழந்தைகள் பிறந்தன. 1999ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 8.3 விழுக்காடு அதிகரிப்பு.

உலகில் ஆகக் குறைவான பிறப்புகள் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை சீராக வளர வேண்டும் என்பதில் சிங்கப்பூர் அரசாங்கமும் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. சிங்கப்பூரர்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூர்வாசிகளிடையே மொத்த கருவுறுதல் விகிதம் 2024ல் முந்தைய ஆண்டைப் போலவே 0.97ஆக உள்ளது.

இறப்புகள் குறைவு

இந்நிலையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் இறப்பு விகிதம் 1.7 விழுக்காடு குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு 26,888 பேர் மாண்டனர். 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 26,442ஆகப் பதிவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, முந்தைய ஆண்டுக்கும் நடப்பு ஆண்டுக்கும் இடையிலான இறப்பு விகிதம் முதல்முறையாகக் குறைந்துள்ளது.

வேகமாக மூப்படையும் சமூகமாக உள்ளது சிங்கப்பூர். அதனால் ஆண்டுக்கு ஆண்டு இறப்பவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகப் பதிவானது. கொவிட்-19 காலகட்டமான 2020, 2021, 2022 ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை சராசரியைவிட சற்று அதிகமாக இருந்தது.

2024ஆம் ஆண்டில் இறப்புக்குக் காரணமாக இருந்தவை, புற்றுநோய், இதயம், ரத்த அழுத்தம் ஆகியவை. இவை மட்டும் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான இறப்புக்குக் காரணமாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்