செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தும் வல்லுநர்கள்

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தும் வல்லுநர்கள்

2 mins read
066ef6a5-a783-4a8a-8d7c-29b8341b3ab2
குறுகிய காலத்தில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் பிற செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சான் ஃபிரான்சிஸ்கோ: மனிதர்களால் புரிந்துகொள்ளவும் கட்டுப்படுத்தவும் முடியாத அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு அசுர வேகத்தில் வளர்ந்துவருவதாக ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் ஜேக்கப் பச்சோக்கி கூறியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகச் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடங்கள் தாமாக முன்வந்து மேம்பாட்டின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மிகவும் குறுகிய காலத்தில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் கணினிகளை இயக்கி, மனிதர்களுடன் பிற செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளன என்றும் தலைமை அறிவியலாளர் கூறினார்.

மனிதர்களின் தலையீடு இல்லாமல் சுயமாகத் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் திறனைச் செயற்கை நுண்ணறிவுக் கொண்டிருப்பதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்றார் அவர்.

“இப்போதுதான் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்,” என்று பச்சோக்கி சுட்டினார்.

மனிதர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கலாம் அல்லது தேவைக்கு ஏற்ப எதிர்கால மேம்பாடுகளைக் குறைத்துக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

தொடக்கநிலை வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட பாதியைச் செயற்கை நுண்ணறிவு நிரப்பிவிடக்கூடும் என்று ‘ஆந்த்ரோப்பிக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேரியோ அமோடெய் எச்சரித்தார்.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மிக வேகமான முறையில் வெளியிடப்பட்டு வருகின்றன. அது, இணையப் பாதுகாப்பு வசதிகளின் முன்னேற்றம், அறிவியல் கண்டுபிடிப்புகள், பல காலமாகத் தீர்க்கப்படாத கணிதச் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றோடு ஒத்துப்போவதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, ‘ஹக்கிங் ஃபேஸ்’ என்ற ஆய்வுத் தளம் மீது தாக்குதல் நடத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ‘மெசேஜ் போர்ட்ஸ்’ எனும் செய்திப் பலகை வழியாகத் தனக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்