தேசிய சேவையில் சேருவதற்குத் தகுதியானவர்களில் 9 விழுக்காட்டினரும் முழு நேர தேசியச் சேவையாளர்களில் 11 விழுக்காட்டினரும் கடந்த ஆண்டு மனநலம் தொடர்பான சில பிரச்சினைகளுக்காக உதவி நாடியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கோ ஸே கீ எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்தபோது தற்காப்புத் துணை அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
மனநலம் தொடர்பான பிரச்சினைகளைச் சந்திக்கும் தேசியச் சேவையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு மாறுபடுவதாகவும் அந்த எண்ணிக்கையில் பொதுவாக மேல்நோக்கிய நிலவரம் தென்படுவதாகவும் திரு சூ தமது பதிலில் குறிப்பிட்டார்.
இது சிங்கப்பூர் இளையர்களிடையே காணப்படும் தேசிய நிலவரத்தை ஒத்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேசியச் சேவையாளர்களின் மனநலனுக்கு உதவும் வகையில் அவர்களின் குடும்பத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் இணைந்து சிங்கப்பூர் ஆயுதப் படை அணுக்கமாகப் பணியாற்றும் என்றார்.
திருவாட்டி கோ, காவல்துறையில் பணியாற்றிய முழுநேர தேசியச் சேவையாளர் ஒருவர் அண்மையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார்.
அத்துடன், தேசியச் சேவையில் சேருவதற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான முன்சேர்ப்பு நடைமுறைகளில் மனநலப் பரிசோதனையை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
தேசியச் சேவையில் சேர்ப்பதற்கு முன்னர் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் மனநலப் பரிசோதனையும் இடம்பெற்று இருப்பதாக திரு சூ தெரிவித்தார்.
காவல்துறையில் பணியாற்றும் 23 வயது முழுநேர தேசியச் சேவையாளர் ஒருவர் கழுத்தில் துப்பாக்கிக் காயத்துடன் அக்டோபர் 15ஆம் தேதி 328 பாசிர் பாஞ்சாங் ரோட்டில் காணப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தேசியச் சேவையில் சேரத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளைச் சந்தித்தோர் விகிதம் 2019ஆம் ஆண்டு 6 விழுக்காடாக இருந்ததாகவும் 2023ஆம் ஆண்டு அது 11 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாகவும் கடந்த ஆண்டு தற்காப்பு அமைச்சு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆயினும், அவர்களில் பெரும்பாலானோரிடம் அந்தப் பிரச்சினை லேசானது முதல் மிதமானது வரையிலான அளவிலேயே இருந்தது என்றும் அமைச்சு அப்போது குறிப்பிட்டு இருந்தது.

