விரைவுச்சாலையில் விபத்து: குழந்தை, பெண் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
34aa4534-4a7f-457b-9125-0ded46f668cf
விரைவுச்சாலையின் சுரங்கப் பாதையில் சிவப்பு நிற கார் ஒன்று டாக்சி ஒன்றின் பின்னால் மோதுவது, எஸ்ஜி விஜிலண்டே தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் தெரிந்தது.  - படம்: எஸ்ஜி ரோடு விஜிலேண்ட்/ஃபேஸ்புக்

மத்திய விரைவுச்சாலையில் (CTE) ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்திற்குப் பின் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

31 வயதுப் பெண்ணும் இரண்டு வயது ஆண் குழந்தையுமான அந்த இருவரும் டாக்சியில் பயணம் செய்தவர்கள்.

மத்திய விரைவுச்சாலையில் கேர்ன்ஹில் ரோடு வெளிவழிக்குப் பின்னர் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக அன்று இரவு 8.30 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் சென்றது.

இரண்டு கார்களும் ஒரு டாக்சியும் சம்பந்தப்பட்ட விபத்து அது.

டாக்சியில் பயணம் செய்த பெண் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் குழந்தை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவ்விருவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

விபத்தில் மேலும் மூவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

அந்த மூவரில் 27 வயது கார் ஓட்டுநரும் அடங்குவார். விபத்து பற்றிய விசாரணைக்கு அவர் உதவி வருகிறார்.

விரைவுச்சாலையின் சுரங்கப் பாதையில் சிவப்பு நிற கார் ஒன்று டாக்சி ஒன்றின் பின்னால் மோதுவது, எஸ்ஜி ரோடு விஜிலண்டே தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் தெரிந்தது. விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டாவது கார் பற்றி அதில் தெளிவாக இல்லை.

விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடர்கிறது

குறிப்புச் சொற்கள்
விபத்துடாக்சிகார்