நோன்புப் பெருநாளுக்கு ஒரு நாள் முன்னர் அதாவது மார்ச் 20ஆம் தேதி சிங்கப்பூரின் பொது ரயில் சேவைகளும் குறிப்பிட்ட சில பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.
மார்ச் 20ஆம் தேதி, செங்காங் - பொங்கோல் இலகு ரயில் சேவை உள்பட ஆறு ரயில் பாதைகளிலும் சேவைகள் நீட்டிக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவைகளும் சாங்கி விமான நிலையச் சேவைகளும் மட்டும் நீட்டிக்கப்படமாட்டா என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாக 53 பேருந்து சேவைகள் நீட்டிக்கப்படவிருக்கின்றன.
நோன்புப் பெருநாள் இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி வருகிறது.
வடக்கு - தெற்கு பாதை, கிழக்கு - மேற்கு பாதை ஆகியவற்றுக்கான இறுதி ரயில்கள் சிட்டி ஹால் நிலையத்திலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும்.
வட்டப் பாதைக்கான இறுதி ரயில், டோபி காட்டிலிருந்து ஹார்பர் ஃபிரண்ட்டுக்கு இரவு 11.55 மணிக்கும் ஹார்பர் ஃபிரண்டிலிருந்து டோபி காட்டிற்கான ரயில் இரவு 11.30 மணிக்கும் புறப்படும்.
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து இறுதி ரயில் பின்னிரவு 12 மணிக்கும் பேய்ஷார் நிலையத்திலிருந்து இறுதி ரயில் பின்னிரவு 12.12 மணிக்கும் புறப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வடக்கு - கிழக்கு பாதை, டவுன்டௌன் பாதை, செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதை ஆகியவற்றுக்கான ரயில் சேவைகள் அரை மணி நேரம் கூடுதலாகச் செயல்படும் என்று எஸ்பிஎஸ்டி நிறுவனம் குறிப்பிட்டது.
222, 225G, 228, 229 உள்ளிட்ட பேருந்துச் சேவைகள் கூடுதல் நேரம் சேவை வழங்குகின்றன. இறுதிப் பேருந்து, மார்ச் 21ஆம் தேதி, பின்னிரவு 1 மணிக்குப் பிடோக் முனையத்திலிருந்து கிளம்பும்.
மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/hrpe-op-hr-ext-200326 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

