தொழிலாளர் தினத்துக்கு முந்தைய நாள் பொதுப் போக்குவரத்துச் சேவை நீட்டிப்பு

தொழிலாளர் தினத்துக்கு முந்தைய நாள் பொதுப் போக்குவரத்துச் சேவை நீட்டிப்பு

2 mins read
34b056f4-2a59-40b3-82ac-4966a5b522c3
தொழிலாளர் தின விடுமுறைக்கு முந்தைய நாள் செங்காங் பொங்கோல் எல்ஆர்டி சேவை நீட்டிக்கப்படும். - படம்: சாவ்பாவ்

மே மாதம் முதல் தேதியான தொழிலாளர் தின விடுமுறைக்கு முந்தைய நாளன்று, பல பேருந்துகளுடன் ரயில் சேவைகளும் நீட்டிக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ (எஸ்பிஎஸ்டி), எஸ்எம்ஆர்டி நிறுவனங்களின் குறிப்பிட்ட பேருந்துச் சேவைகளும் ரயில் வண்டிகளும் கூடுதல் நேரம் செயல்படும்.

வடக்கு-தெற்கு,கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் , வடகிழக்கு, டவுன்டவுன் எம்ஆர்டி நிலையங்களில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 30) ஏறத்தாழ அரை மணி நேரம் சேவைகள் நீட்டிக்கப்படும்.

செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ரயில்களும் அதே நாளில் கூடுதல் நேரம் செயல்படும் என்று எஸ்பிஎஸ்டி நிறுவனம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அன்றைய கடைசி ரயில்கள் செங்காங், பொங்கோல் நிலையங்களிலிருந்து அதிகாலை 1.06 மணிக்கும் 1.09 மணிக்கும் முறையே புறப்படும் என்று அது விளக்கியது.

நகர மண்டப நிலையத்திலிருந்து பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க், மரினா சவுத் பியர், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் நகர மண்டப நிலையத்திலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் குறிப்பிட்டது.

வட்டப்பாதையில் டோபிகாட் நிலையத்திலிருந்து ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்கான கடைசி ரயில் இரவு 11.55 மணிக்கும், ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து டோபிகாட் செல்லும் கடைசி ரயில் இரவு 11.30 மணிக்கும் புறப்படும்.

தாம்சன் - ஈஸ்ட்கோஸ்ட் பாதையில், உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து பேஷோர் நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12 மணிக்குக் கிளம்பும். பேஷோர் நிலையத்திலிருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் அதிகாலை 12.12 மணிக்குப் புறப்படும்.

வடக்கு கிழக்குப் பாதையில், ஹார்பர்ஃபிரண்ட், பொங்கோல் நிலையங்களில் கடைசி ரயில்கள் முறையே நள்ளிரவு 12.30 மணிக்கும் நள்ளிரவிலும் புறப்படும்.

டவுன்டவுன் பாதையில், புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து எக்ஸ்போ நிலையம் நோக்கிச் செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12.03 மணிக்கும் எக்ஸ்போவிலிருந்து புக்கிட் பாஞ்சாங் செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12.04 மணிக்கும் புறப்படும்.

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவைக்கும் சாங்கி விமான நிலைய ரயில் சேவைக்குமான செயல்பாட்டு நேரங்களில் மாற்றம் இருக்காது.

சுவா சூ காங், புக்கிட் பாஞ்சாங், பூன்லே, உட்லண்ட்ஸ் ஆகிய நான்கு முனையங்களில், எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 18 பேருந்துச் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படும். அங்குக் கடைசிப் பேருந்துகள் அதிகாலை 1.20 மணிக்கும் 1.40 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும்.

குறிப்புச் சொற்கள்