ஜூன் மாதப் பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன்னதாக, அடுத்தடுத்து வந்துள்ள இரண்டு பொது விடுமுறை நாள்களால் அரிதான மிக நீண்ட வார இறுதி கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் பலர் வழக்கத்தைவிட முன்னதாகவே வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
புதன்கிழமை (மே 27) ஹஜ்ஜுப் பெருநாளும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) விசாக தினமும் கொண்டாடப்படுகின்றன. விசாக தினத்தை ஒட்டி அதற்கு அடுத்த திங்கட்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் பள்ளி விடுமுறையும் இதே காலகட்டத்தில் தொடங்குவதால், நான்கு நாள்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக 10 நாள்கள் நீண்ட விடுமுறையைக் கழிக்கும் அருமையான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி, ஓய்வுபெற்றவர்களும் பிள்ளைகள் இல்லாதவர்களும் நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிட்டுள்ளதாக ஹாங் தாய் சுற்றுப்பயண முகவை தெரிவித்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் மே 23ஆம் தேதியன்றே வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுவிட்டனர்.
சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பும் இடங்களாக ஜப்பான், சீனா, தென்கொரியா, வியட்னாம் ஆகியவை விளங்குகின்றன. குறிப்பாக, சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்த தடையற்ற 30 நாள் இருதரப்பு விசா விலக்குக் கொள்கை காரணமாக, சீனாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளதாக சிடிசி சுற்றுப்பயண முகவை குறிப்பிட்டுள்ளது.
இந்த மிக நீண்ட வார இறுதி விடுமுறையின்போது தனது ஏற்பாட்டில் மட்டும் குறைந்தது 50 சுற்றுலா குழுக்கள் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுள்ளதாக நம்ஹோ சுற்றுப்பயண முகவை உறுதிப்படுத்தியுள்ளது. பலர் சொகுசுக் கப்பல் பயணங்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

