ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து இயோ சூ காங் சாலை வரை புவாங்கோக் டிரைவ் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கும்.
இதன்மூலம் புவாங்கோக், செங்காங் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிக எளிதாக விரைவுச்சாலைகளை அடையலாம். சாலை நீட்டிப்பு காரணமாக அவர்களது பயண நேரம் குறையும். ஃபெர்ன்வேல் சவுத், ஜெரல்ட் மக்லிஸ்டன், புவாங்கோக் கிரசெண்ட் ஆகிய வட்டாரங்களில் உள்ள குடியிருப்புப் பேட்டைகளை புதிய சாலை நீட்டிப்பு நேரடியாக இணைக்கும்.
அதன் வழியாக வாகன ஓட்டுநர்கள் சிலேத்தார் விரைவுச்சாலை, கேபிஇ விரைவுச்சாலை, மத்திய விரைவுச்சாலை ஆகியவற்றை அடையலாம். இதன்மூலம் பயண நேரம் ஏறத்தாழ பத்து நிமிடங்கள் குறையும் என்று வாகனம் ஓட்டும் சில குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
நீட்டிக்கப்பட்ட சாலையில் புதிய பேருந்துச் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
ஏற்கெனவே நடப்பில் உள்ள பேருந்துப் பயணப் பாதைகள் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் மேம்படுத்தப்படும் என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.