அரசாங்கச் சொத்துகள் பயன்பாட்டில் புத்தாக்கங்களை ஊக்குவிக்க ஏதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்துகளை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு சிங்கப்பூர் நில ஆணையம் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகச் சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) நடந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய சட்ட அமைச்சர் எட்வின் டோங், ஆணையம் தற்போது 2,600 அரசாங்கச் சொத்துகளையும், 11,000 ஹெக்டர் அளவிலான நிலங்களையும் நிர்வகித்து வருவதைச் சுட்டினார். பயன்பாட்டில் இல்லாத நிலங்களைச் சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்
தொடர்ந்து பேசிய சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, நிலங்களுக்கான சந்தைத் தேவைகள் குறித்தும், அரசாங்கச் சொத்துகளை தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவாகச் சரியான முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய, பொது நிறுவனங்கள், தொழில்துறையினருடன் இணைந்து ஆணையம் பணியாற்றுவதாக விளக்கினார்.
அதற்குச் சில சான்றுகளையும் குறிப்பிட்ட அவர், “பொதுவாக, இடைக்காலப் பயன்பாடுகளுக்காக அரசுச் சொத்துகள் பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே குத்தகைக்கு விடப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து எழுந்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, சில சொத்துகள் நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன,” என்றார். இது முதலீட்டை மீட்கும் காலத்தை நீட்டிப்பதுடன், வணிக நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
நில மேம்பாட்டுக் கட்டணம் குறித்த மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யானின் கேள்விகளுக்கு விடையளித்த திரு எரிக் சுவா, “கடந்த 2022ஆம் ஆண்டு அக்கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து அதில் இதுவரை பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும், நிறுவனங்கள் கட்டணங்களைக் கணக்கிட உதவும் மின்னிலக்கக் கருவி உட்பட பல்வேறு மேம்பாடுகள் குறித்து அண்மையில் அமைச்சர் எட்வின் டோங் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

