குடிபானக் கலன்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் (பிசிஆர்எஸ்) ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை வர்த்தகர்கள் அந்த முத்திரை இல்லாத குடிபானங்களை விற்றுமுடிக்க அவகாசம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தது.
அவர்களில் 85 விழுக்காட்டினர் அல்லது 1,600க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை முத்திரையற்ற பானங்களை விற்றுத் தீர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் என்இஏ கூறியது.
இம்மாதத் தொடக்கத்தில், தகுதிபெறும் சில்லறை வியாபாரிகளும், லாப நோக்கமற்ற அற நிறுவனங்களும் செப்டம்பர் 30க்குள்ளாக அவற்றை விற்கவேண்டும் என்ற நிபந்தனையை ஒரு மாதத்துக்கு நீட்டித்துக்கொள்ள விண்ணப்பம் செய்யலாம் என்று என்இஏ அறிவித்திருந்தது.
அதன் பிறகு துறைசார்ந்தோரின் கருத்து சேகரிப்பு நடந்தது. அதில் சிறிய சில்லறை வியாபாரிகள் விற்பனை முறையின் மாற்றத்துக்கு வழங்கப்பட்ட அவகாசமான கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக எவ்வளவோ நேர்மையாக முயன்றும் அவற்றை முழுவதும் விற்றுத் தீர்க்க முடியவில்லை என்று கருத்துரைத்தனர்.
எனவே எஞ்சிய விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை விரைவுபடுத்த என்இஏ பரிசீலித்துவருகிறது. அவர்களில் பலர் அண்மையில் விண்ணப்பம் செய்தோர் ஆவர் என்று அதன் அறிக்கையில் விவரித்தது.
மளிகைக் கடைகள், குடியிருப்புகளில் இயங்கும் கடைகள், தனியாகச் செயல்படும் உணவுக் கடைகள் என அவை பெரும்பாலும் சிறிய வர்த்தகங்கள் எனவும் என்இஏ விளக்கியது.
