பேரளவில் வேட்டையாடப்பட்ட சாங்கி கடலோர உயிரினங்கள்

பேரளவில் வேட்டையாடப்பட்ட சாங்கி கடலோர உயிரினங்கள்

1 mins read
d369db65-f519-409b-afc2-5cc8b756e728
சாங்கி கடலோரப் பகுதியில் பேரளவிலான கடல்வாழ் உயிரினங்கள் பிடிக்கப்பட்டு சமைக்கப்பட்டன. - படம்: டோயின்

சாங்கி கடலோரப் பகுதியில் பேரளவில் கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்துச் சமைப்பது போன்ற காணொளி இணையத்தில் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. ‘டோயின்’ சமூக ஊடகத்தில் வெளியான இந்தக் காணொளியில், கூடைகளில் நண்டுகள், சிப்பிகள் உள்ளிட்ட பல உயிரினங்களை மக்கள் குவித்து வைப்பது காட்டப்பட்டது. பின்னர், அவை உணவகத்தில் சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டன.

இந்த வகையான கடலோர உயிரினங்களைப் பிடிக்க மேற்கொள்ளப்படும் பயணம் அண்மைக்காலமாகப் பிரபலமடைந்து வருகிறது. எனினும், அடிக்கடி பேரளவில் உயிரினங்களைப் பிடிப்பது கடலோரச் சூழலமைப்பின் நீடித்த நிலைத்தன்மைக்குக் கேடு விளைவிக்கும் என இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்துத தேசியப் பூங்காக் கழகத்தின் இயக்குநர் கேரன் டுன் கருத்து தெரிவித்தார். கடலோரச் சூழலமைப்பு மிகவும் உணர்வுபூர்வமானது என்றும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடலோர உயிரினங்களை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்றுவது பல்லுயிர்ப் பெருக்கத்தையும் இயற்கைச் சமநிலையையும் கடுமையாகப் பாதிக்கும் என்றார் அவர்.

மேலும், ஆபத்தான கடல் உயிரினங்களால் மனிதர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் நேரலாம் என எச்சரித்தார். சிஸ்டர்ஸ் தீவு கடல் பூங்கா, சுங்கை பூலோ ஈரநிலப் பாதுகாப்புப் பகுதி போன்ற இடங்களில் உயிரினங்களைப் பிடித்துச் சேகரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் பூங்காக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுத் திட்டங்களில் பங்கேற்று கடல் சூழலைப் பாதுகாக்க உதவலாம் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
கடல்உயிரினம்சாங்கிகண்டனம்