2027க்குள் வாட்டர்லூ ஸ்திரீட்டில் விரிவான நடைபாதை, கூடுதல் பொது இடங்கள்

2 mins read
d2da432c-ffcf-4675-96b2-807986cd9821
வாட்டர்லூ ஸ்திரீட்டில் நடைபெறவிருக்கும் மேம்பாட்டுப் பணிகள் - ஓவியர் கைவண்ணத்தில். - சித்திரிப்புப் படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

வாட்டர்லூ ஸ்திரீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

2027ஆம் ஆண்டுக்குள் அப்பகுதியில் விரிவான நடைபாதைகள், நிழலுக்காகக் கூடுதல் மரங்கள் ஆகியவற்றை அமைக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை (டிசம்பர் 11) ஆணையம் வெளியிட்டது.

மிடில் ரோட்டுக்கும் பிராஸ் பாசா ரோட்டுக்கும் இடையிலான வாட்டர்லூ ஸ்திரீட்டில் தற்போதுள்ள சாலையோர வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டு பாதசாரிகளுக்கான நடைபாதை விரிவாக்கப்படும் என அறிக்கையில் அது குறிப்பிட்டது.

அப்பகுதியை நடப்பதற்கு இன்னும் வசதியான இடமாக மாற்றுவதற்காகவும் வெளிப்புற நிகழ்ச்சிகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்துவதற்கேற்ற புதிய பொது இடங்களை அமைப்பதற்காகவும் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்தது.

பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா டிசம்பர் 11ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகையாளரை நியமிக்க ஒப்பந்தப் புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூரின் கலை, மரபுடைமை வட்டாரமான பிராஸ் பாசா- பூகிசின் முந்தைய மேம்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வாட்டர்லூ ஸ்திரீட் மேம்பாட்டுப் பணிகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வாட்டர்லூ சென்டருக்கு முன்னால் பயணிகளை ஏற்றி, இறக்கிவிடுவதற்குக் கூரையுடன் கூடிய இடங்கள் ஆகியவையும் இந்த மேம்பாட்டில் அடங்கும் என நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.

வாட்டர்லூ சிங்கப்பூர் ஹோட்டல் வழியாக நன்யாங் நுண்கலைக் கழகத்தை அடைய தற்போது பயன்பாட்டில் உள்ள கூரைவேய்ந்த நடைபாதையுடன் இணைக்கும் வகையில் வாட்டர்லூ ஸ்திரீட்டின் குறுக்கே ஓர் இணைப்புப் பாதை கட்டப்படும்.

மேலும், குயீன் ஸ்திரீட்டையும் வாட்டர்லூ ஸ்திரீட்டையும் இணைக்கும் வகையில் 100 மீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலை ஒன்றும் அமைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்