சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாடும் வேளையில் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
பாடாங்கிலும் மரினா பேயிலும் 2025 தேசிய தினக் கொண்டாட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பல கண்காணிப்புப் படகுகளைச் சிங்கப்பூர்க் காவல்துறை பணியில் ஈடுபடுத்தவிருக்கிறது.
சிங்கப்பூர் ஆறு, காலாங் ஆறு, மரினா நீர்த்தேக்கம் ஆகியவற்றில் அந்தக் கப்பல்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாடாங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த ஆண்டுகளைப் போலவே ஏறக்குறைய 2,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
கரையோரக் காவல் படை, போக்குவரத்துக் காவல் பிரிவு, கூர்க்கா படை ஆகியவை அதில் அடங்கும்.
துணைக் காவல் அதிகாரிகள் உட்பட சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் ஆயுதப் படை, சுகாதார அமைச்சு ஆகியவையும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முடுக்கிவிடுவர்.
காவல்துறைக் கண்காணிப்பு நாய்களும் வெடிபொருள்களை மோப்ப நாய்களும் கண்காணிப்புப் பணிகளில் அதிகாரிகளுடன் இணையவிருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்து இடங்களில் சோதனைகள் நடத்தப்படும்.
கூட்டத்தைக் கண்காணிக்க மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படும். பொதுமக்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்க்க ஒலிபெருக்கிகளும் மின்னிலக்க சமிக்ஞை வசதிகளும் அந்தக் கேமராக்களில் உள்ளன.
பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டாரம் குறித்தும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்பாக இருக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

