புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூரில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டுக்காக டிசம்பர் 31ஆம் தேதி இரவு நடத்தப்படும் ‘ஒன் கவுண்ட்டவுன் 2026’ (ONE Countdown 2026) வாண வேடிக்கை நிகழ்ச்சிக்காகச் சில சாலைகளும் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண மரினா பே, த காலாங் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நூற்றுக்கணக்கான காவல்துறை, துணைக் காவல் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) அறிக்கை வெளியிடப்பட்டது.
அவசர உதவிக் குழுக்கள், சிறப்புப் படை அதிகாரிகள், கடலோரக் காவற்படை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுவார்கள்.
கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கும் விதமாக மரினா பே வட்டாரத்தில் உள்ள இடங்களில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கூட்ட நெரிசலைக் கண்காணிக்கும் விதமாக நிகழ் நேர வரைபடமும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு பேருந்து மற்றும் ரயில் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

