உலகளாவிய மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2027 இறுதிக்குள் எக்சான்மோபில் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை குறைக்கத் திட்டமிடுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த எரிசக்தி நிறுவனம், இதுகுறித்த உறுதியான எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. சிங்கப்பூரில் இதற்கு ஏறக்குறைய 3,500 ஊழியர்கள் உள்ளனர். எனவே, எதிர்வரும் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஏறத்தாழ 500 ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.
தனது சிங்கப்பூர் அலுவலகத்தை நகரின் மையப் பகுதியிலிருந்து 2027 இறுதிக்குள் ஜூரோங் ஆலை உள்ள இடத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக எக்சான்மோபில் புதன்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகளவில் 2,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக எக்சான்மோபில் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. எக்சான்மோபிலின் நீண்டகால மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை, இதன் ஊழியரணியில் ஏறக்குறைய 3 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை பாதிக்கும்.
அமெரிக்காவில் எந்தவித ஆட்குறைப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்று புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
சிங்கப்பூரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து கட்டிக்காக்கப் போவதாக எக்சான்மோபில் கூறியது.
இது, சிங்கப்பூரில் இரண்டு சுத்திகரிப்புத் தளங்களை இயக்குகிறது. பைனியர் சாலையில் ஒன்றும் ஜூரோங் தீவில் மற்றொன்றும் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து, ஒரு நாளைக்கு 592,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
தனது ஹார்பர்ஃபிரண்ட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை பைனியர் சாலையில் உள்ள ஜூரோங் சுத்திகரிப்பு ஆலைக்கு மாற்றவும் எக்சான்மோபில் திட்டமிட்டுள்ளது.

