அமெரிக்க எரிசக்தி நிறுவனமான எக்ஸான்மோபில் (ExxonMobil), ஜூரோங் தீவில் எழுப்பப்பட்ட தனது புதிய தொழிற்சாலையில் அதிக மதிப்புள்ள பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கி உள்ளது
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது கழிக்கப்படும் கனமான பொருள்களை மதிப்புமிக்க மசகு எண்ணெய் தயாரிப்பாகவும் சல்ஃபர் குறைந்த எரிபொருளாகவும் மாற்றக்கூடியது அந்தத் தயாரிப்புப் பணி.
வடிகட்டப்பட்ட எண்ணெய்யை மேம்படுத்தும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே புதிய தொழிற்சாலை.
பல பில்லியன் டாலர் முதலீட்டிலான அந்தத் திட்டம் நிறைவுற்றதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளது.
திட்டப் பணிகளை கடந்த 2023ஆம் ஆண்டு முடிக்க இலக்கு வகுக்கப்பட்டது. ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அதனைத் தாமதப்படுத்தியது.
புதிய தொழிற்சாலையில் உற்பத்தி தொடக்கப்பட்டு உள்ளதால் தனது மொத்த உற்பத்தித்திறன் நாள் ஒன்றுக்கு 20,000 பீப்பாய்கள் என்னும் அளவுக்கு உயரும் என எக்ஸான்மோபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6,000 பீப்பாய் மசகு எண்ணெய்யும் அதனுள் அடங்கும் என்றது அது. அந்த மசகு எண்ணெய்யை புதிய தொழிற்சாலை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஆகக் குறைந்த சல்ஃபர் ரசாயனத்தை உள்ளடக்கிய டீசல் மற்றும் அது தொடர்பான பொருள்களின் உற்பத்தியும் அந்தத் தொழிற்சாலையில் அதிகரிக்கும் என்றது அது.