பச்சைக் குத்திக்கொள்வோரிடம் கண் பாதிப்பு: புதிய ஆய்வு

பச்சைக் குத்திக்கொள்வோரிடம் கண் பாதிப்பு: புதிய ஆய்வு

2 mins read
5b5352f4-028f-4d3c-a28f-7de7795e5afd
பச்சைக் குத்துவோரிடையே ஒன்றிலிருந்து மூன்று பேர் கண் வீக்கத்தால் பாதிக்கப்படுவதாகத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்தது. - படம்: ஆப்பிரிக்கா ஸ்டூடியோ

பச்சைக் குத்திக்கொள்வதால் கண்களில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அண்மையில் வெளிவந்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கண் மருத்துவப் பிரிவு, 40 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பச்சைக் குத்தப் பயன்படுத்தப்படும் கறுப்பு மையாலும் பெரிய பச்சைகளாலும் உடலில் நாள்பட்ட வீக்கங்கள் ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகைய பாதிப்புகள் பச்சை குத்தி பல ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆஸ்திரேலியாவில் பச்சைக் குத்திக்கொண்ட மூவரில் ஒருவரிடம் நாள்பட்ட வீக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, பச்சைக் குத்திக்கொண்டோரிடையே ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஒன்றிலிருந்து மூன்று பேர் கண் வீக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டது.

பச்சைக் குத்த பயன்படுத்தப்படும் கறுப்பு மையில் உள்ள நுண்துகள்கள், உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியைப் பாதித்து உயிரணுக்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடும் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன.

பச்சைக் குத்துவதால் ஏற்படும் கண் வீக்கத்தை உறுதிப்படுத்த நேரடியான பரிசோதனைகள் தற்போதைக்கு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பச்சைக் குத்துவோரில் நாள்பட்ட கண் வீக்கத்தால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோருக்கு ஏறக்குறைய 20 அல்லது 30 வயது என்று கண்டறியப்பட்டது.

பெரும்பாலோரிடையே பச்சைக் குத்துதல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றபோதும் ஒருசில தனிநபர்களின் எதிர்ப்புச் சக்தி வழக்கத்துக்கு மாறாக வலுவிழப்பதால் பச்சைக் குத்துதலுடன் தொடர்புடைய வீக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

ஒருசில சந்தர்ப்பங்களில் உடலில் கவசமாகச் செயல்படும் எதிர்ப்புச் சக்தி, பச்சைக் குத்திய பிறகு செயலிழந்துபோகிறது என்று விளக்கம் அளித்தார் இணைப் பேராசிரியர் மஞ்சரி ஹஹிரி.

குறிப்புச் சொற்கள்